இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 100-ஐ தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை, நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 7 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்த நிலையில், அதில் ஒருவருக்கு டிசம்பர் 16-ம் தேதி ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.


கொரோனா தொற்று சற்று குறைந்ததை அடுத்து தற்போது உருமாறிய கொரோனாவாக ஒமிக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. உலக அளவில் இதுவரை 72 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது நம்மால் கணிக்க முடிந்த அளவு மட்டுமே என்றும், இன்னும் பல நாடுகளில் பரவியிருக்க வாய்ப்புகள் இருக்கிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டிசம்பர் 17-ம் தேதி நிலவரப்படி, 101 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 



ஒமிக்ரான் தொற்று டெல்டா வைரஸைவிட 70 மடங்கு அதிகம் பரவும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, ஒமிக்ரான் மாறுபாடு மனித சுவாசக் குழாயை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய தகவலை வழங்கும் முதல் ஆய்வு இதுவாகும். ஒமிக்ரான் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட வேகமாகப் பரவுகிறது மற்றும் மனித மூச்சுக்குழாயில் உள்ள அசல் SARS-CoV-2 வைரஸை விட வேகமாக பெருகும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2007-ஆம் ஆண்டு முதல் வளர்ந்து வரும் வைரஸ் தொற்றுகளை ஆராய்வதற்கு சுவாசக் குழாயின் எக்ஸ் விவோவை (உயிருள்ள உடலுக்கு வெளியே) , ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். Ex vivo என்பது ஒரு உறுப்பு, உயிரணு அல்லது திசுக்களை உயிருடன் எடுக்கப்படும் மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாகும். 


சோதனை மாதிரியைப் பயன்படுத்தி, டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகைகளால் மனித மூச்சுக்குழாய்களில் ஏற்படும் தொற்றுநோயை ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது ஒமிக்ரான், டெல்டா வைரஸைவிட 70 மடங்கு அதிகமாக பரவுவதை சோதனை தொடங்கப்பட்ட 24 மணிநேரத்தில் உறுதிப்படுத்தினர். அதேசமயம், மனித நுரையீரல் திசுக்களில், ஒமிக்ரானின் செயல்பாடு SARS-CoV-2 வைரஸைக் காட்டிலும் குறைவான செயல்திறன் கொண்டதாக (10 மடங்கு) கண்டறியப்பட்டது. 


ஆய்வின் முதன்மை ஆசிரியரான டாக்டர் மைக்கேல் சான் சி-வாய் கூறுகையில், இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்றார். அவர் மேலும் கூறுகையில், மிகவும் தொற்றுநோயான வைரஸ் அதிகமான மக்களைப் பாதித்து மிகவும் கடுமையான நோயையும் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண