மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சாந்து அணிந்திருந்த க்ரீடத்தின் விலை எவ்வளவு தெரியுமா? அட வாங்க இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிப்போட்டி, பிரஞ்ச அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. லாரா தத்தா கடைசியாக 2001 -ம் ஆண்டு Miss Universe பட்டம் வென்றார். அதன்பிறகு, கடந்த 20 வருடங்களாக எந்த இந்தியப் பெண்களுக்கும் இந்தப் பட்டம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், 2021-ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றிருக்கிறார். இவருக்கு வயது 21. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இஸ்ரேலில் நடைபெற்ற 80 அழகிகளுள் ஒருவராக கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்துவுக்கு அணிவிக்கப்பட்ட க்ரீடத்தின் விலையைக் கேட்டால் ஒரு நிமிடம் நாமும் அழகிகளைப் போல் வாய்ப் பொத்தி ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவோம்.
அட ஆமாம்ங்க மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வெல்லும் அழகிக்கு சூட்டப்பட்ட அந்த க்ரீடம் 18 கேரட் தங்கத்தால் ஆனது. அதில் 1725 வைரக் கற்கள் பொரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 3 கோலட்ன கேனரி வைரங்களும் இருக்கும். பூவின் இதழ்கள், இலைகள், கொடிகள் என அழகிய வடிவம் கிரீடத்தில் இருக்கும். இந்த அழகிய கிரீடத்திற்கு பவர் ஆஃப் யுனிட்டி கிரவுன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர்களுக்கு சூட்டப்பட்ட கிரீடத்துடன் ஒப்பிடும் போது இது அளவில் சிறியது என்றாலும் கேரட் எடையளவில் பார்க்கும் போது இந்த கிரீடம் இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு எடை அதிகம் கொண்டது. இதன் மொத்த எடை 62.83 கேரட்.
அப்புறம் இந்த கிரீடத்தின் விலை 5 மில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.38 கோடியே 6 லட்சத்து 99 ஆயிரத்து 500. அடேங்கப்பா என்று நீங்கள் வாயை ஆச்சர்யத்தில் அகலப் பிளந்தீர்கள்தானே.
ஹர்னாஸ் சந்து பின்னணி:
சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து(21) இந்த ஆண்டுக்கான பிரபஞ்சி அழகி பட்டத்தை கைப்பற்றினார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் பட்டத்தையும் 2019ஆம் ஆண்டு மிஸ் பஞ்சாப் பட்டத்தையும், 2021ல் மிஸ் யுனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) பட்டத்தையும் வென்றுள்ளார்.
ஹாலிவுட் ஆசை:
சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், லாரா தத்தா, பிரியங்கா சோப்ரா, பார்வதி ஓமனக்குட்டன், யுக்தா முகி, தியா மிர்ஸா என மிஸ் வேர்ல்டு, மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்கள் அனைவருமே சினிமாவில் தலைகாட்டி விட்டார்கள். சினிமா ஆசை ஹர்னாஸுக்கு மட்டும் இல்லாமல் போகுமா என்ன? ஆனால் அம்மணி நேரடியாக ஹாலிவுட் தானாம். அவரே அளித்த பேட்டி ஒன்றில், "என் மீது நம்பிக்கை வைத்து என் மீது பலர் அன்புமழை பொழிந்தனர். அவர்களுக்காக எனது இதயம் முழுவதும் மரியாதை நிரம்பி உள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வெற்றியை தொடர்ந்து, என்னை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க பலர் விரும்புகிறார்கள்.
நானும் பெரிய திரையில் எனது திறமையை காட்ட விரும்புகிறேன். இந்தி படங்களில் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். இந்த நூற்றாண்டு மக்கள், திரைப்படங்களாலும், இணைய தொடர்களாலும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதனால், நானும் மக்களை ஈர்ப்பதுடன், சமுதாயத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய விஷயங்கள் பற்றி பேச விரும்புகிறேன்." என்று கூறினார்.