பீகாரில் பாம்பு கடிபட்ட ஒரு நபர் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையில் ஈடுபட்டு, பாம்பை மீண்டும் கடித்து பழிவாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர்:


 

பீகார் மாநிலம் ரஜோலியில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் லோஹர் என்ற தொழிலாளி பணிபுரிந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவில்,  தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​விஷப்பாம்பு அவரைக் கடித்தது. இதையடுத்து, உடனடியாக எழுந்த தொழிலாளி, பாம்பை பிடித்து மூன்று முறை கடித்து கொன்றார்.

 

 இச்சம்பவத்தைத் தொடர்ந்து , அங்கு பணிபுரியும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சந்தோஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.  அவருக்கு, உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். 

 

பாம்பு இறந்தது:


இச்சம்பவம் குறித்து பாம்பு கடிபட்ட சந்தோஷ் தெரிவித்ததாவது, “எனது கிராமத்தில், பாம்பு கடித்தால், விஷம் ஏறாமல் தடுக்க, அதை மீண்டும் கடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகத்தான் பாம்பை கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், பாம்பால் கடிபட்ட ஒருவர், பாம்பை திருப்பி கடித்த சம்பவமானது காட்டுத்தீ போல பரவியது.  

 

விஷமுள்ள உயிரினமாக பார்க்கப்படும் பாம்பு உயிரினத்தை பார்த்தாலே படையே நடங்கும் என்று சொல்வார்கள். பாம்புக்கு பயப்படாமல், கடித்த பாம்பையே திருப்பி கடித்த சம்பவமானது பேசு பொருளாகியுள்ளது.  இச்சம்பவத்தில் பாம்பானது உயிரிழந்தது, ஆனால் அந்த நபர் பிழைத்து கொண்டார்.

 

மருத்துவர்கள் எச்சரிக்கை: 


இந்த நிகழ்வு குறித்து, மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில், பாம்பை திருப்பி கடித்தால் விஷம் ஏறாது என்பது மூட நம்பிக்கையாகும். இதுபோன்று பாம்பு கடித்தால், திருப்பி கடிக்க கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். இவரை போன்று, செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என தெரிவித்துள்ளனர்.