மக்களவையில், மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல்:
இந்த ஆண்டு 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றதால், கடந்த பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரையிலான பட்ஜெட் கூட்டத்தொடர், 2024க்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
2024-25 பட்ஜெட்:
இதையடுத்து, 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். மேலும், மத்திய நிதியமைச்சர் 7வது முறையாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுவாகும்.