மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் வேகமாக ஓட்டி வரப்பட்ட BMW கார், தம்பதியினர் வந்த பைக்கின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பைக்கில் வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வொர்லியின் கோலிவாடா பகுதியைச் சேர்ந்த காவேரி நக்வாவும், அவரது கணவர் பிரதிக் நக்வாவும் அதிகாலை 5:30 மணியளவில் மீன் பிடிக்க சாசூன் டாக்கிற்குச் சென்றனர். பிடித்த மீன்களை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் பின்னால் வேகமாக வந்த BMW கார் மோதியது.
விபத்தை ஏற்படுத்திய BMW கார்: அடித்த வேகத்தில் பைக்கில் அமர்ந்திருந்த இருவரும் காரின் முன்பகுதியில் போய் விழுந்தனர். தன்னை தற்காத்து கொள்ளும் பொருட்டு காரில் முன்பகுதியில் இருந்து குதித்து கணவர் தப்பித்து கொண்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக, காரின் முன்பகுதியில் சிக்கிய பெண், 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்டார்.
காயமடைந்த பெண்ணை காப்பாற்றுவதை விட்டுவிட்டு காரின் டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார். காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "கணவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பைக்கை இடித்து விட்டு தப்பி ஓடிய வழக்கில் விசாரணை நடந்து வருகிறது" என தெரிவித்தது.
மும்பையில் நடந்தது என்ன? காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷாம் (24) என காவல்துறை தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மிஹிர் தப்பியோடிய நிலையில், அவரது தந்தை ஷாவை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
BMW காரில் காரை ஓட்டி வந்தவரை தவிர்த்து மற்றொருவரும் உள்ளே இருந்துள்ளார். காரில் அமர்ந்திருந்த இருவர் மீதும் வோர்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கார், காவல்நிலையத்திற்கு எடுத்து செல்கையில் அதன் நம்பர் பிளேட் நீக்கப்பட்டிருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
சமீபத்தில்தான், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் போர்சே சொகுசு காரை ஓட்டி 17 வயது மைனர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.