ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடும் சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள குல்கமில்தான் இந்த இரண்டு சம்பவங்களும் நடந்துள்ளன. இரண்டு இடங்களிலும் ராணுவ அதிகாரிகள் அதிரடியில் இறங்கினர்.
ஜம்மு காஷ்மீரில் பதற்றம்: இரண்டு துப்பாக்கிச் சண்டைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்திருக்கின்றன. முதலில் மோட்டர்காமிலும் பின்னர் சினிகம் கிராமத்திலும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், நான்கு தீவிரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர்.
இன்று காலை இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து டிஜிபி ஆர்.ஆர். ஸ்வைன் கூறுகையில், "தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதை மைல்கல்லாக கருதுகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மக்களின் ஆதரவுடன் அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வோம்.
உடல்களை பரிசோதனை செய்ததில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக எங்களிடம் தகவல்கள் கிடைத்துள்ளன. இது ஒரு பெரிய மைல்கல். கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளோம்" என்றார்.
ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை: மோட்டர்காம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்ததையடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் கூட்டுக் குழு நேற்று கிராமத்தை சுற்றி வளைத்தது.
இலக்கை நோக்கி அவர்கள் சென்றபோது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதால், ராணுவத்தினர் பதிலடி கொடுக்க நேர்ந்தது என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கிடையில், இதேபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் சினிகம் கிராமத்திலும் நடந்தது. உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. இங்கும், பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழைந்தபோது, தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகளும், ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.
நேற்று தொடங்கிய துப்பாக்கிச்சூடு ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தொடங்கியது. மோட்டர்காமில் இன்னும் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருப்பதால், அதன் முழு விவரம் அது முடிந்த பின்னரே தெரியவரும்.
சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.