கடந்த ஆண்டு ஜூலையில் கர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் ஜில்லா பரிஷர் அமைப்பின் தலைமை நிர்வாகியாக பதவியேற்ற ஒருவாரத்திற்குள் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்தார் பூபாலன் ஐ.ஏ.எஸ், அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையை கையாளுவதிலும் பொதுமுடக்கத்தின் மூலம் தொற்றை கட்டுப்படுத்துவதிலும் மட்டுமே அரசு நிர்வாகம் கவனம் செலுத்தி வந்தது.


பொதுமுடக்கத்தால் அதிகரித்த குழந்தை திருமணங்கள் 


இந்த நிலையில் கொரோனா பொதுமுடக்க காலத்தில் குழந்தை திருமணங்களை பற்றி புகாரளிக்கும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததை கண்டு கவலை அடைந்த பூபாலன் ஐ.ஏ.எஸ், கொரோனா வைரஸ் தொற்றின் பொதுமுடக்கமும் அதனால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்ததுமே குழந்தை திருமணங்கள் அதிகரித்ததற்கான முக்கிய விளைவு என்கிறார் பூபாலன் ஐ.ஏ.எஸ். பொதுமுடக்க காலத்தில் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்தநிலையில், தங்கள் குழந்தைகளின் திருமண செலவுகளை குறைப்பதற்காக 18 வயதிற்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை மட்டும் கர்நாடகாவில் 107 குழந்தை திருமண வழக்குள் பதிவாகி இருந்தன.



திருமணங்களை தடுக்க குழு அமைத்த ஐ.ஏ.எஸ்


இந்த குழந்தை திருமணங்கள் ஊட்டச்சத்து குறைபாடு, பள்ளி விடுப்பு, ரத்த சோகை மற்றும் தாய்வழி இறப்பு  போன்ற பிற பிரச்னைகளை சார்ந்தது என்பதால் இவற்றை தீர்க்க கடந்தாண்டு ஜூலை முதல் பலதரப்பட்ட திட்டங்களை பூபாலன் கொண்டு வந்தார். இதனை தடுக்க பூபாலன் ஐ.ஏ.எஸ், கிராம பஞ்சாயத்து, அங்கன்வாடி தொழிலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்தார். குழந்தை திருமணத் தடைச்சட்டம் பிரிவு 2006 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களை பயிற்றுவிக்கவும் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்த பூபாலன். இந்த வகை கூட்டங்களை நடத்தும்போது குழந்தைகளுக்கு நடக்கும் திருமணங்களை பற்றி தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என உறுதி அளித்தார். தங்கள் பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் சம்பந்தப்பட்ட சிறுமிகள் புகாரளிக்க மாட்டார்கள் என்பது பூபாலனின் எண்ணமாக இருந்தது. இக்குழு 176 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி சில பெற்றோர்களுக்கு எதிராக 10 வழக்குகளையும் பதிவு செய்தனர். 1098 என்ற உதவி எண் மூலம் அழைக்கவும் அல்லது உள்ளூரில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி தனது சொந்த எண்ணை வழங்கி புகார் அளிப்பதை ஊக்கப்படுத்தினார் பூபாலன் ஐ.ஏ.எஸ்.



பொதுமுடக்கம் ஏற்படுத்திய பாதிப்பு


உள்ளூர் மக்களுடன் பேசும்போது பொதுமுடக்கம் என்பது அவர்களை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது என்பதை உணர முடிந்ததாக கூறும் பூபாலன் ஐ.ஏ.எஸ். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பலரும் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துவிடுவோம் என்று நம்பியதால் குடும்பத்தில் உள்ள சிறுமிகளுக்கு திருமணம் செய்து கொள்ள ஊக்குவிக்கப்பட்டதாக கூறுகிறார். அதுமட்டுமின்றி பல்வேறு நகரங்களில் வேலை செய்த கிராம இளைஞர்கள் வேலையின்மை காரணமாக சொந்த கிராமங்களுக்கு சென்றதால் அவர்கள் திருமணம் செய்யவும் குடும்பத்தினரால் நிர்பந்திக்கப்பட்டனர். குழந்தை திருமணத்தின் தீமைகளை பற்றி விவாதிக்க குழந்தைகளை மட்டுமே கொண்ட ஒரு கிராம சபை குழு அமைக்கப்பட்டது. திருமணத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் தங்களது நண்பர்கள் மூலம் வீட்டில் செய்தியை பரப்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இது போன்ற நடவடிக்கைகளால் கடந்த ஆண்டில் குழந்தை திருமணங்கள் மீதான புகார்களில் 176 திருமணங்கள் நிர்வாகத்தின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டன. திருமணமான 10 சிறுமிகள் 18 வயதை எட்டியபின்னரே வீடு திரும்பி தங்கள் மாமியார் வீட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.


மீட்கப்பட்ட சிறுமிகளுக்கான மறுவாழ்வு திட்டம் 


2019ஆம் ஆண்டில் குழந்தை திருமணங்கள் குறித்த புகார்கள் 50 ஆக இருந்த நிலையில் கொரோனா பரவலுக்கான பொதுமுடக்கத்திற்கு பிறகு இந்த புகார்களின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்ததாக கூறும் பூபாலன். இதனை தடுக்க உள்ளூர் மக்களை ஒருங்கிணைத்து புகார் தர வலியுறுத்துயது அதிக பலனை கொடுத்ததாக கூறுகிறார். திருமணத்தில் இருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்ட உடன் அவர்கள் குழந்தை நலக்குழுவின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். குழந்தையின் மனநலம் மற்றூம் நிதி நிலைமையை பொறுத்து அவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள் இல்லை எனில் குழந்தைகள் நல இல்லத்தின் காவலில் வைக்கப்படுகின்றனர்.


குழந்தை திருமணத்தை நிறுத்திய பிறகு வீடு திரும்பும் சிறுமிகள் பாலியல் ரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக சிறுமிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டது. தற்போது வரை  5 முதல் 6 சிறுமிகளை காப்பகத்தில் வைத்துள்ளதாக கூறும் பூபாலன் ஐ.ஏ.எஸ், மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அரசின் சார்பில் எம்ராய்ட்ரி, தையல்  மற்றும் கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிகப்படுவதாகவும், கணினி பயிற்சிகளை கற்றும் சிறுமிகள் 18 வயதினை அடைந்தால் அரசின் அலுவலங்களிலேயே டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணிபுரிந்து வருவதாக கூறுகிறார்.


சிறுமிகளை கண்காணிக்கும் சூராஷினி ஆன்லைன் போர்ட்டல் 


இதற்கிடையே திருமணங்களை தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பப்படும் சிறுமிகளின் விவரங்களை கொண்டு அந்த சிறுமிக்கு மீண்டும் திருமணம் நடந்துள்ளதா? அல்லது குடும்பத்தினரால் வேறு எந்த வகையிலும் துன்புறுத்தப்படுகிறாரா என்பதை அறிய வாரந்தோரும் வீட்டிற்கு அலுவலர்கள் அனுப்பட்டு சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பிரத்தேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்ட்டலில் சிறுமியின் நிலை குறித்த விவரங்களை பதிவேற்றி பதிவேற்றுகின்றனர். சூராஷினி என்ற இந்த ஆன்லைன் போர்ட்டலில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தும் குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு துறைசார் அலுவலர்களும் அதனை தவறாமல் கண்காணிக்க வேண்டும். இந்த ஆன்லைன் போர்ட்டலை கர்நாடக அரசு பாராட்டியது மட்டுமின்றி மாநிலம் முழுவதும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் கணினிஅறிவியலில் பட்டம் பெற்ற பூபாலன் ஐ.ஏ.எஸ்.