யுபிஎஸ்சி தேர்வில் இனியும் தோல்வியினைச் சந்தித்தால் அடுத்துத் திருமணம் தான் என பெற்றோர்கள் நிபந்தனையிட்டமையால், 6 மாதம் தன் அறையினை விட்டு வெளியேறாமல் படித்து ஐ.ஏ.எஸ் ஆகியுள்ளார் ஹரியானாவைச் சேர்ந்த நித்தி சிவாஷ்.
UPSC தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் ஆவது என்பது பலருக்கு ஒரு போராட்டமாகவே இருக்கும். இப்பயணத்தில் மிகுந்த மன அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டும். பல ஆண்டுகள் யுபிஎஸ்சி தேர்விற்காக மட்டும் படித்து வந்த நிலையில், ஒரு வேளை தேர்ச்சியில் தோல்வியடைந்தால் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரர்களிடமிருந்து பல்வேறு அவதூறுகளையும், விமர்சனங்களையும் சந்திக்க நேரிடும். அப்படித்தான் இருந்துள்ளது ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 83 வது இடத்தினைப்பிடித்துள்ள ஹரியானாவினைச்சேர்ந்த நித்தி சிவாஷின் வாழ்க்கையும். யார் இவர்? ஐ.ஏ.எஸ் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற்றார் என்ற அவரது வெற்றிப்பயணத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியினைச்சேர்ந்தவர் நித்தி சிவாஷ். படிப்பில் மிகுந்த ஆர்வம் மற்றும் ஈடுபாடு கொண்டிருக்கும் இவர் 10 ஆம் வகுப்பில் 95 சதவீதமும், 12 ஆம் வகுப்பில் 90 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றார்.இதனையடுத்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த அவர், அதிலும் நல்ல மதிப்பெண் பெற்றமையால் ஹைதராபாத்தில் உள்ள டெக் மஹிந்திரா கம்பெனியில் டிசைனிங் இன்ஜினியராக தன் பணியினைத்தொடங்கினார். ஆனாலும் இவருக்கு யுபிஎஸ்சி தேர்வினை எழுதி ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பமாக இருந்தது. இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு தன்னுடைய டிசைன் இன்ஜினியர் வேலையினை விட்டு விட்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான தயாரிப்புகளைத்தொடங்கினார். ஆனால் இவரது குடும்பம் நித்தி சிவாஷின் செயலுக்கு உடன்படவில்லை. இருந்தப்போதும் பெற்றோரை எதிர்த்து தன்னுடைய முயற்சியினைத்தொடங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இரு முறை தேர்வினை எழுதியும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. தோல்வியினை சந்தித்த அவருக்கு வீட்டில் பல்வேறு விமர்சனங்கள். இனியும் தேர்வு தேர்வு என்று நேரத்தினை வீணாக்கக் கூடாது என கூறியுள்ளனர். மேலும் இந்த முறை தேர்வில் தோல்வியுற்றால் திருமணம் செய்வதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளை அவர்களுக்கு பெற்றோர் அவருக்கு வழங்கியுள்ளனர்.
ஆனாலும் இதனையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நித்தி சிவாஷ், ஐ.ஏ.எஸ் ஆவது ஒன்றினை மட்டும் தன்னுடைய இலக்காகக் கொண்டு அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். தொடர்ச்சியாக 6 மாதங்கள் எந்த சிந்தனையும் இல்லாமல் தன் அறையினுள் படிப்பினைத் தொடங்கியுள்ளார் நித்தி. பெற்றோர் கொடுத்த மன அழுத்தம் ஒரு புறம் இருந்தாலும் வெற்றி ஒன்றினையே குறிக்கோளாக கொண்ட இவர், விடா முயற்சியுடன் படித்தமையால் தற்பொழுது இந்திய அளவில் 83 வது இடத்தினைப்பெற்று ஐ.ஏ.எஸ் ஆகியுள்ளார். தன்னுடைய சிறுவயது கனவினை விடாப்பிடியுடன் நிறைவேற்றிக்காட்டியுள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரியான நித்தி சிவாஷ்.
இத்தேர்வில் வெற்றிப்பெற்றது குறித்து தன்னுடைய கருத்தினைப்பகிர்ந்து கொண்ட நித்தி சிவாஷ், யுபிஎஸ்சி தேர்வில் தோல்விக்கு சிறிய தவறுகள் தான் காரணமாகின்றன என்பதை நான் என்னோட தேர்வு வாழ்க்கையில் நான் நன்றாக உணர்ந்துவிட்டேன். எனவே சிறிய விஷயங்கள் தான் என விட்டு விடாமல் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என புதிதாக வரும்தேர்வர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதனை மனதில் ஏற்றிக்கொள்ளாமல், என்ன குறைபாடு என்பதனைக்கண்றிந்து பாசிட்டிவ் மனதோடு அடுத்த தேர்விற்கு தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளதோடு, நீங்கள் தனியாக படிப்பதே உங்களுக்கு வெற்றியினை தரும் என தெரிவித்துள்ளார். இதோடு வரலாற்று பாடத்தினை எடுத்து படித்த இவர், தன்னுடைய 9 மற்றும் 10 வது புத்தகங்கள் மிகுந்த உதவியாக இருந்தது எனவும் கருத்தினை பகிர்ந்துள்ளார்.
.