ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், இன்று அம்மாநில முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார்.






ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் 200 தொகுதிகளில் ஒரு வேட்பாளர் உயிரிழந்த காரணத்தால் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 69 இடங்கள் மட்டுமே கைப்பற்றியது. இதனையடுத்து, ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர் வாசுதேவ் தேவ்நானி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.






பஜன்லால் சர்மா முதல் முறையாக தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது 56-வது பிறந்தநாளான இன்று (டிச.15) ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவி ஏற்றார். ஜெய்ப்பூரில் இருக்கும் ஆல்பர்ட் வளாகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா பதவி பிரமானம் செய்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், கோவா முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த், திருப்பூரா முதலமைச்சர் மணிக் சாஹா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, குஜராத் முதலமைச்சர் புபேந்திர படேல், உத்திரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.


ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) போட்டியாளரான புஷ்பேந்திர பரத்வாஜுக்கு எதிராக 1,45,162 வாக்குகளைப் பெற்று, சங்கனேர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.


பிரேம் சந்த் பைர்வா ராஜஸ்தானில் உள்ள டுடு தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். 2023 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பாபுலால் நாகரை 35,743 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அவர் மீண்டும் தொகுதியை கைப்பற்றினார்.


ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரி, ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகர் தொகுதியில் காங்கிரஸின் சீதாராம் அகர்வாலை எதிர்த்து 71,368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


 


Parliament Winter Session: பதாகைகளை ஏந்தி முற்றுகையிட்ட எம்.பி.,க்கள் - நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு


Parliament Security Breach: ‘எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன’ - நாடாளுமன்ற தாக்குதல் குறித்து வாய் திறந்த அமைச்சர் அமித் ஷா