நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 


அஜெண்டா ஆஜ்தக் 2023 அமர்வில் பேசிய அமித் ஷா, “இது ஒரு தீவிரமான சம்பவம். இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. நிச்சயமாக, ஒரு குறைபாடு உள்ளது. ஆனால், நாடாளுமன்ற பாதுகாப்பு சபாநாயகரின் கீழ் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். சபாநாயகர் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம். அந்த அறிக்கை விரைவில் சபாநாயகருக்கு அனுப்பப்படும்” எனத் தெரிவித்தார்.


மேலும், “இடைவெளிகள் இருக்கக்கூடாது. ஆனால் அந்த இடைவெளிகளை நிரப்புவதே எங்கள் பொறுப்பு. இதை அரசியல் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்,” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 


நாடாளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன் தினம், நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகைகளை கக்கும் கருவிகளை வீசினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில், இந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது ஆனால் அதற்கு செவி சாய்க்காததால் எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 14 மக்களவை உறுப்பினர் என 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும்  குளிர்கால தொடர் முழுவது அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் இது தொடர்பாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, நேற்று அதாவது டிசம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து மாநிலங்களவை சபாநாயகரும் துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ” இந்த விஷயத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பாராளுமன்றத்தில் உள்ள I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, இந்த விவகாரம் குறித்து பரிசீலித்தேன். மாநிலங்களவையின் (ராஜ்யசபா) விதிகளில் நடைமுறை விதி 267ன் கீழ் இந்த விவகாரம் அவைக்குறிப்பில் குறிப்பிடப்படவேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உள்துரை அமைச்சர் அமித் ஷா அறிக்கை சமர்பிக்கும் வரையில் விதி 267-இன் கீழ்  இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்படும் வரை அவையில் வேறு எந்த விதமான நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது. பாதுகாப்பை விட முக்கியமானது எதாவது இருக்கின்றதா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 


இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். அதாவது “ இந்த பிரச்சனையை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றனர். இந்த விவகாரம் விசாரணை வளையத்திற்குள் உள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.