பெங்களூருவில் புத்தாண்டு தினத்தன்று மகிழ்ச்சி கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கறாராக தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு அனைவருக்கும் ஒரு படிப்பினை கற்றுக்கொடுத்துள்ளது. இம்மாதிரியான சூழலில், 2025ஆம் ஆண்டை நோக்கி அனைவரும் காத்திருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாக வரவேற்க இருக்கின்றனர்.
இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சின்னஞ்சிறு கிராமங்கள் வரை மக்கள் நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம்.
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்:
குறிப்பாக, ஐடி துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூருவில் மக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தினை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள பெருநகர மாநகராட்சியும் பெங்களூரு பெருநகர காவல்துறையும் இணைந்து பல்வேறு முன்னேற்பாடுகளையும், எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் எடுத்துள்ளது.
ஆனால், பெங்களூருவில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், அதற்கு விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் புத்தாண்டு தினத்தன்று கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் சொன்னது என்ன?
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "புத்தாண்டு கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. தனி நபர் கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது. (மன்மோகன் சிங் இறப்பு காரணமாக) அரசு அலுவலகங்களில் துக்கம் அனுசரிக்கிறோம்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அனைவரின் பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 10 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஒரு சர்வதேச நகரம். எனவே சட்டம் மற்றும் ஒழுங்கில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
நாங்கள் தொழில் நிறுவனங்களை கூட கட்டுப்படுத்தவில்லை. அனைவரும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். இதை ஒரு எச்சரிக்கை அல்லது கோரிக்கையாக நீங்கள் கருதலாம்" என்றார்.
இதையும் படிக்க: New Year 2024: பிறந்தது புத்தாண்டு; 2024ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்; தலைநகரில் களைகட்டிய கொண்டாட்டம்