கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.


அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் சிறப்பு குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என கூறிய அவர், "இந்தியர்கள் அனைவருக்கும் இது பெருமை சேர்க்கும் விஷயமாகும். உலகெங்கிலும் இருக்கும் நாடுகளில் இதைக் கற்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 



"தமிழ் கற்கும் ஆர்வம் அதிகரிப்பு"


கடந்த மாத இறுதியில், பிஜியில் இந்திய அரசின் உதவியோடு தமிழ் பயில்விக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.  கடந்த 80 ஆண்டுகளில், பிஜியில் தமிழில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழ் பயிற்றுவிப்பது என்பது இதுவே முதல் முறை.


இன்று பிஜியின் மாணவர்கள் தமிழ்மொழியையும், சம்ஸ்கிருதத்தையும் கற்றுக் கொள்ள நிறைய ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு உவப்பைத் தருகிறது" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "பாரதத்தின் இருபெரும் சாதனைகள் இன்று உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இதைக் கேட்டு நீங்கள் பெருமைப்படுவீர்கள். இந்த இருபெரும் வெற்றிகளும் ஆரோக்கியத் துறையில் கிடைத்திருக்கின்றன. முதல் சாதனை என்னவென்றால், அது மலேரியாவுடனான போராட்டத்தில் கிடைத்திருக்கிறது.


மலேரியா என்ற நோய் 4000 ஆண்டுகளாக மனித சமூகத்திற்கே ஒரு பெரும் சவாலாக இருந்து வருகிறது.  சுதந்திரமடைந்த காலகட்டத்தில், இது நமது மிகப்பெரிய சுகாதாரச் சவால்களில் ஒன்றாக இருந்தது. ஒரு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான குழந்தைகளின் உயிர்குடிக்கும் அனைத்துத் தொற்றுநோய்களில் மலேரியாவுக்கு மூன்றாவது இடம்.


பிரதமர் மோடி என்ன பேசினார்?


நாட்டுமக்கள், இந்தச் சவாலை தீவிரத்தோடு எதிர்கொண்டார்கள். முன்னேற்றமும் கண்டார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு பேருவகை ஏற்படுகிறது.  உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை என்ன கூறுகிறது தெரியுமா?


நாட்டில் 2015ஆம் ஆண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டிற்குள்ளாக மலேரியா பாதிப்பு விஷயங்கள் மற்றும் இதனால் ஏற்படும் இறப்புக்களில் 80 சதவீத வீழ்ச்சி காணப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் சிறிய சாதனை அல்ல. இதில், மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி என்னவென்றால் இந்த வெற்றி, நாட்டுமக்கள் அனைவரின் பங்களிப்புக் காரணமாகவே கிடைத்திருக்கிறது.


நம்முடைய மனவுறுதிப்பாடு மற்றும் விழிப்புணர்வு காரணமாக நம்மால் எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கான இரண்டாவது எடுத்துக்காட்டுத் தான் புற்றுநோய்க்கு எதிரான போர். உலகின் பிரபலமான மருத்துவ ஆராய்ச்சி இதழான Lancet நடத்திய ஆய்வு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.


அந்த ஆராய்ச்சியின் படி, இப்போது நாட்டில் சரியான காலத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு கணிசமாக அதிகரித்து விட்டது. குறித்த காலத்தில் என்றால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை 30 நாட்களுக்கு உள்ளாகத் தொடங்குவது என்பது தான். 


மேலும் இதில் பெரிய பங்களிப்பை அளித்துவருவது ஆயுஷ்மான் பாரத் திட்டம் தான். இந்தத் திட்டத்தின் காரணமாக, புற்றுநோயாளிகளில் 90 சதவீதம் பேரால், குறித்த காலத்தில் சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது" என்றார்.