கடந்த 2023 ஆம் ஆண்டு அனைவருக்கும் ஒரு படிப்பினையை கற்றுக்கொடுத்து 2024ஆம் ஆண்டுக்கு வழிவிட்டுள்ளது. புத்தாண்டினை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக வரவேற்றனர். இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சின்னஞ்சிறு கிராமங்கள் வரை மக்கள் நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து புத்தாண்டை வரவேற்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தினை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சியும் சென்னை பெருநகர காவல்துறையும் இணைந்து பல்வேறு முன்னேற்பாடுகளையும், எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டு இருந்தது. 


சென்னை மாநகராட்சி முழுவதும் சாலைகளில் பேரிகார்டுகளை அமைத்தது மட்டும் இல்லாமல் பேரிகார்டுகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.  நேற்று அதாவது டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் சென்னை மாநகராட்சி முழுவதும் சுமார் 18ஆயிரம் போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபட்டனர். இதுமட்டும் இல்லாமல் காவலர்கள் மாநகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்களுக்கு ஏதுவாக காவல்துறையும் மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு ஏற்படுகளை மேற்கொண்டதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது யாரும் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்ககூடாது. மது அருந்திய தங்களது நண்பர்களை, மது அருந்தாதவர்கள் தங்களது வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டும், அல்லது மது அருந்தியவர்கள் வாடகை வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 


புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அதிகம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மெரினா கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, நீலாங்கரை கடற்கரை மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் மாலை 7 மணிக்கு மேல் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறை தரப்பில் இதுபோன்று அறிவிப்பு வந்ததும் மக்கள் மாலை 7 மணிக்குள் கடற்கரை சாலைகளில் ஒன்றுகூட ஆரம்பித்தனர். இதனால் கடற்கரைச் சாலையில் மக்கள்  கூட்டம் அலைமோதியது. இதனால் மெரினா கடற்கரைச் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பவில்லை. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது. இதனால் மெரினா கடற்கரையில் புத்தாண்டை வரவேற்க வந்த மக்கள் வாகங்களை காமராஜர் சாலைக்கு வெளியே வாகனங்களை நிறுத்திவிட்டு, நடந்தே வந்தனர். புத்தாண்டை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இணைந்து கொண்டாடி வரவேற்றனர். காவல்துறை தரப்பில் காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தின் முன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. 


கொண்டாட்டத்தின்போது யாருக்கும் எந்தவிதமான அசௌகரியங்களும் ஏற்படாத வண்ணம் காவல்துறை கூடுமானவரை மிகச் சிறப்பாக செல்பட்டனர். சந்தேகிக்கும் படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டது. 


ஆடல் பாடலுடன் தொடங்கிய இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், சரியாக நள்ளிரவு 12 மணி ஆனதும் மக்கள் மிகவும் உற்சாகமாக “ஹேப்பி நியூ இயர்” என உரக்க கூறி 2024ஆம் ஆண்டை மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் பலர் தங்களைச் சுற்றி இருந்தவர்களிடம் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். பலர் தாங்கள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த வண்ண பலூன்களை காற்றில் பறக்கவிட்டனர். கடற்கரைகள் மட்டும் இல்லாமல் நட்சத்திர ஹோட்டல்களிலும் மால்களிலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பலர் தங்களது நட்பு வட்டத்திற்கும் உறவினர் வட்டத்திற்கும் வாட்ஸ்- ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.  ஏபிபி நாடு சார்பாக வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.