முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகமும் பெங்களூரில் பெய்த வரலாறு காணாத மழையுமே வெள்ளத்திற்கு காரணம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று குற்றம் சாட்டி உள்ளார்.
எல்லா பிரச்னைகளையும் தாண்டி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதை தனது அரசு ஒரு சவாலாக எடுத்துக்கொண்டது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாநில தலைநகரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கி, வீடுகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நாங்கள் பல ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். அவற்றை தொடர்ந்து அகற்றுவோம். அவற்றை சிறப்பாக நிர்வகிக்கும் வகையில், தொட்டிகளுக்கு மதகுகள் அமைத்து வருகிறோம். கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெரும்பாலான பகுதிகளில் தண்ணீரை எடுக்க தொடங்கியுள்ளோம். ஓரிரு பகுதிகளைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் நீர் வற்றிப் போய்விட்டன" என்றார்.
பெங்களூரில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளன. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பெங்களூரு துணை படைத்தளபதி ஜே செந்தில் குமார், “நாங்கள் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுக்களை அனுப்பியுள்ளோம். மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த குழுவினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களை வெளியேற்ற பெங்களூரு மாநகராட்சி டிராக்டர்களையும் பயன்படுத்தி வருகிறது" என்றார்.
செப்டம்பர் 9, வெள்ளிக்கிழமை வரை கர்நாடகாவில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் பெங்களூரு, கடலோர கர்நாடகாவின் மூன்று மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5 முதல் 9 வரை குடகு, ஷிவமொக்கா, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒரு மாதமாக இடைவிடாத மழை பெய்து வருகிறது.
இந்த அளவுக்கு மழை பெய்திருந்தால் பெங்களூரு நகரின் நிலையே நியூயார்க்கிலும் ஏற்பட்டிருக்கும் என கர்நாடக அமைச்சர் கே சுதாகர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகரமாக கருதப்படும் பெங்களூரில் மோசமான உள்கட்டமைப்பின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக இன்ஃபோசிஸின் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பாய் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கிண்டல் செய்யும் விதமாக பதில் அளித்துள்ள அமைச்சர், "ஒரு சிக்கலைத் தீர்ப்பதை விட புகார் செய்வது எளிது. நியூயார்க்கில் இவ்வளவு மழை பெய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நூற்றுக்கணக்கான கிராமங்கள் வளர்ச்சியடையாமல் பெரிய பெங்களூரில் இணைக்கப்பட்டது யாருடைய தவறு” என அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.