கேந்திரிய பள்ளி மாணவர்கள் 17 பேருக்கு மூச்சு விடுவதில் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஆந்திரா:


ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று காலை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 17 மாணவர்கள் உடனடியாக காக்கிநாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைவரும்  நலமுடன் இருப்பதாகவும், மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.






ஆட்சியர் தகவல்:


இந்த சம்பவம் குறித்து காக்கிநாடா மாவட்ட ஆட்சியர் மற்றும் கே.வி.-காக்கிநாடா பள்ளி குழு தலைவருமான கிருத்திகா சுக்லா கூறுகையில், காலை 10.30 மணி முதல்  சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு மாணவர்கள் 17 பேர் ஆபத்தில் இருந்து மீண்டுள்ளனர். மாணவர்கள் தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.




இன்று காலையில், ஆறாம் வகுப்பு மாணவர்கள், ஒரு மாணவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர். பின்னர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர், பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பிறகு மாணவர்கள் உடல் நிலையில் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க தொடங்கினர். மேலும் மாணவர்களிடமிருந்து மருத்துவ பரிசோதனைக்காக உணவு மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கிருத்திகா தெரிவித்தார்.


அமைச்சர் உத்தரவு:


இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்வி அமைச்சர் போட்சா சத்யநாராயணா, மாணவர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிப்பதை உறுதிப்படுத்தவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை விசாரிக்கவும் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.