கேரளாவின் அறுவடைத் திருவிழாவான ஓணம் மஹாபலி சக்கரவர்த்தி இல்லாமல் முழுமையடையாது. மஹாபலியின் பாரம்பரிய சித்தரிப்பு பற்றிய விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், திராவிட வம்சாவளியைச் சேர்ந்தவராக மஹாபலி சித்தரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளன. 


 






கருமையான தோல், மெலிந்த உடல், கேரள மலர்களால் ஆன மாலை, நீல நிறத் துண்டு ஆகியவற்றுடன் இந்த ஆண்டு மகாபலி சித்தரிக்கப்பட்டு கேரளா முழுவதும் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


ஆனால் திராவிட வம்சாவளியைச் சேர்ந்த இந்த அசுர மன்னன் பழங்காலத்திலிருந்தே ஆரிய அம்சங்களைக் கொண்டுள்ளார். மேலும், பூணூல், தங்க நகைகள், பட்டை மீசை, பானை-வயிறு உடையவர் என்றே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளார்.


 






 கேரள மாணவர் அமைப்பான SFI கூட்டமைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இந்த வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.


 






இந்நிலையில் இந்தப் புதிய மஹாபலி குறித்துப் பேசியுள்ள மகாராஜா கல்லூரியின் SFI தலைவர் அமல்ஜித், இது கூட்டு முயற்சி அல்ல. பல கல்லூரிகள் இணைந்து ஒரே மாதிரியாக இப்படி சிந்துத்துள்ளோம். ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தியாகக் கொண்டாடும் முயற்சிக்கு எதிரான போராட்டம் அது” எனத் தெரிவித்துள்ளார்.


மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்க, திருமால் வாமனராக அவதரித்து சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் கேட்டதாகவும் அதற்கு மஹாபலி சக்கரவர்த்தி இசைந்ததைத் தொடர்ந்து, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து மகாபலியின் ஆணவத்தை அழிக்க முற்பட்டார்.


அப்போது மஹாபலி சக்கரவர்த்தி, ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்ற வாமனர், அவருக்கு அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை திருவோணத் திருநாளாகவும், கேரள புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.