Watch Video : பெங்களூருவில், மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விழுந்ததில் தாய் மற்றும் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில்க்போர்டு-தேவன ஹன்ளி மெட்ரோ வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கான்கிரீட் தூண் கட்டுவதற்காக இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று காலை தூண் கட்டுவதற்காக பொருத்தப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது விழுந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு தம்பதி, 2 குழந்தைகள் கம்பிகளுக்கு அடியில் சிக்கி கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் விரைந்து சென்று கம்பிகளின் இடிபாடுகளில் சிக்கி கொண்ட தம்பதி மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தாயும், அவரது ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது உயிரிழந்தது தேஜஸ்வினி (28) என்பதும் அவரது மகன் இரண்டரை வயது குழந்தையான விகான் என்பது தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த தேஜஸ்வினியின் கணவர் லோகித் குமார் மற்றும் அவரது மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லோகித்குமார் சிவில் என்ஜினீயர் ஆவார். பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தேஜஸ்வினி சாப்ட்வேர் என்ஜினீயர் என்பதும் பெங்களூருவில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
நிதியுதவி
மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விழுந்ததில் உயிரிழந்து தாய் மற்றும் 2 வயது குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்தை நிதியுதவியாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ தூண் கம்பி விழுந்த பெண் என்ஜினீயர் தனது குழந்தையுடன் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காண்டிராக்டர், மெட்ரோ ரயில் நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய முதல்வர் பசுவராஜ் பொம்மை விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் தூண் கம்பிகள் விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
அரசு எழுதிக் கொடுப்பதில் புள்ளி, கமாவை கூட ஆளுநர் மாற்ற முடியாது - மக்களவை முன்னாள் செயலாளர் கருத்து