காற்று மாசுபாடு:


தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இதனால், மனிதர்களுக்கு நோய்கள் பல தாக்குவதுடன், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் இந்த பிரச்னை நீடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டில் இந்தியாவில் அதிக மாசு நிறைந்த முதல் 10 நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின்படி, அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.


டெல்லி முதலிடம்:


டெல்லியில் கடந்தாண்டில் பாதுகாப்பான வரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாக காற்று மாசடைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் டெல்லியில் காற்று மாசானது 7 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு 108 மைக்ரோ கிராம்ஸ்/ கியூபிக் மீட்டர் ஆக இருந்த காற்று மாசுபாட்டின் அளவு, கடந்த ஆண்டில் 99.71 மைக்ரோ கிராம்ஸ்/ கியூபிக் மீட்டர் ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில்,  பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல்  நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த டெல்லி அரசு அண்மையில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


அதிக மாசடைந்த நகரங்கள்:


டெல்லியை தொடர்ந்து, ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத் நகரம் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரம் மூன்றாவது இடத்திலும், அதிகளவில் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 பத்து இடங்களில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நகரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய அரசு நடவடிக்கை:


2024 ஆம் ஆண்டுக்குள் 102 நகரங்களில் காற்று மாசுபாட்டின் அளவை 2017ம் ஆண்டு இருந்ததை காட்டிலும்,  20 முதல் 30 சதவீதம் அளவிற்கு குறைக்க தேசிய சுத்தமான காற்று திட்டம் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தேசிய காற்றுத் தரக் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் 2011-15க்கான தேசிய சுற்றுப்புற காற்றுத் தரத் தரங்களை பூர்த்தி செய்யாத 131 நகரங்கள் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான இலக்கை அடையாத நகரங்களாக குறிப்பிடப்படுகின்றன. இதனிடையே, 2026ம் ஆண்டிற்குள் நாட்டின் காற்று மாசுபாட்டை, தற்போதுள்ள சூழலில் இருந்து 40 சதவிகிதம் அளவிற்கு குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


அரசின் இலக்கு:


2021 ஆம் ஆண்டில் PM2.5 அளவைப் பொறுத்தவரை மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்த காசியாபாத், PM10 அளவுகளின் அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தற்போதைய வருடாந்திர சராசரி பாதுகாப்பான காற்றுக்கான வரம்புகள் PM2.5 மற்றும் PM10 ஆகியவை முறையே ஒரு கன மீட்டருக்கு 40 மைக்ரோகிராம்கள் மற்றும் ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.