ஆளுநர் வெளிநடப்பு:
நடப்பாண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், தமிழ்நாட்டில் நேற்று தொடங்கியது. அப்போது, தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரையில் இருந்த சில பகுதிகளை, படிக்காமல் ஆளுநர் ரவி தவிர்த்தார். இதையடுத்து, அரசு எழுதிக்கொடுத்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இருக்கும் என, முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இதனால், ஆளுநர் ரவி உடனடியாக அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் இன்றி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
”கமா, புள்ளியை கூட சேர்க்க முடியாது”
அந்த வகையில் மக்களவை முன்னாள் செயலாளர் ஆச்சாரியும் தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து, டெக்கான் ஹெரால்டு நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், ”அரசால் தயார் செய்யப்பட்ட உரையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை. அரசு தயாரித்த உரையில் ஒரு புள்ளி மற்றும் கமாவை கூட ஆளுநரால் சேர்க்க முடியாது. ஆளுநரின் உரை என்பது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை பிரதிபலிக்கும் ஆவணம். எனவே அரசு வழங்கும் ஆளுநர் உரையை படிக்க வேண்டும். இதுவே அரசியலமைப்பு நிலைப்பாடு'' என விளக்கமளித்துள்ளார்.
”இது சட்டப்பேரவை அல்ல”
அதேநேரம், ”ஆளுநர் வாசித்தது அனைத்தும் அவை குறிப்பில் இடம்பெறாமல், உரையின் அச்சிடப்பட்ட பகுதி மட்டுமே பதிவாகும் என்பதால், அவருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானத்தை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை. அவை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மட்டுமே ஆளுநர் உரை நிகழ்த்தினார். சபாநாயகர் தலைமையில் அவை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே அது சட்டப்பேரவை. அத்தகைய சூழலில் ஆளுநர் உரைக்கு எதிராக முதலமைச்சரால் தீர்மானம் கொண்டு வர முடியாது” என ஆச்சாரி தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர்கள் கருத்து:
அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் புறக்கணித்தது தொடர்பாக பேசியுள்ள மூத்த வழக்கறிஞர்கள், ”தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அடுத்த அமர்வின் நடவடிக்கைகளை விளக்குவதே ஆளுநரின் உரை. அதன்படி, ஆளுநர் வாசிப்பது அவரது உரை அல்ல, அன்றைய அரசாங்கத்தின் உரை என்றும் விளக்குகின்றனர். சட்டமன்றம் தனக்கான சொந்த நடைமுறைகளைக் கொண்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களிடையே விநியோகிக்கப்படும் எழுத்துப்பூர்வ உரை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டால், அந்த முடிவு எந்தவொரு அரசியலமைப்பு அதிகாரத்தின் மறுஆய்வில் இருந்து விடுபடும்” என தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கண்டனம்:
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஆளுநராக மாறியுள்ள உளவுத்துறைஅதிகாரியின் செயல்பாடு அரசியல் சாசன விதிகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறும் செயலாகும். அவரை நியமித்தவர்களின் விருப்பப்படி செயல்படுகிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அவமானம் என, தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்:
இதனிடையே, ஆளுநரின் செயல்பாடு தனக்கு ஆச்சரியம் ஒன்றும் அளிக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் பாஜக அலுவலகங்களாகவோ அல்லது ஆர்எஸ்எஸ் அலுவலகங்களாகவோ மாற்றப்படுகின்றன என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன் என, திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் விமர்சித்துள்ளார்.