இந்தியாவில் கடந்த 26ஆம் தேதி 73-ஆவது குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குடியரசுத் தினத்தன்று டெல்லி ராஜ்பாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின்னர் முப்படைகளின் அணிவகுப்பை அவர் ஏற்றார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா முடிந்த மூன்றாவது நாளில் பீட்டிங் ரிடிரீட் அணிவகுப்பு நடைபெறும். இதில் முப்படைகளும் ராஜ்பாதையில் திரும்பி அணி வகுத்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி செல்வார்கள். 


இந்நிலையில் இந்தாண்டிற்கான பீட்டிங் ரிடிரீட் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இந்த அணிவகுப்பின் போது 10 நிமிடங்கள் ட்ரோன் மூலம் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதாவது இந்தியாவின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. 






இதற்காக ஐஐடி-யை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 6 மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான மொத்த நிதியையும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதன்மூலம் 1000 ட்ரோன்களை ஒரே நேரத்தில் ஆகாயத்தில் பறக்கவிட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 






இதற்கு முன்பாக பிரட்டன், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் இந்த செயலை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து தற்போது நான்காவது நாடாக இந்தியா இதை செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை பறைசாற்றும் வகையில் காட்சிகள் ட்ரோன்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை பாட்லேப் டைனாமிக்ஸ் என்ற அமைப்பு ஐஐடி- டெல்லி மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் துணையுடன் செய்து முடித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: கருவுற்ற பெண்கள் பணியாற்ற விதிக்கப்பட்ட தற்காலிக தடை.. உத்தரவை வாபஸ் வாங்கியது எஸ்.பி.ஐ..!