கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மருத்துவ படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடு தொடர்பாக மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் பதிவு செய்வதை பார்த்து இந்தியா முழுவதும் உதவி வரும் நபர் தான் பி.வி. ஶ்ரீனிவாஸ். ஆபத்தான சூழலில் உதவியின்றி தவிக்கும் மக்களுக்கு அசுரவேகத்தில் உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் யார் இந்த பி.வி.ஶ்ரீனிவாஸ்? எவ்வாறு அவர் இப்படி உதவி செய்கிறார்?
கர்நாடகா மாநிலத்தின் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.வி.ஶ்ரீனிவாஸ். இவர் பள்ளிப்பருவத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக வலம் வந்துள்ளார். யு-16 மற்றும் யு-19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் களமிறங்கி விக்கட் கீப்பராக விளையாடியுள்ளார். 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் இவரை கிரிக்கெட் வாழ்க்கையில் வெளியே தள்ளியுள்ளது. அப்போது இவரின் கண்களில் பந்து பட்டதால் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சிறிய இடைவேளை விட நேரிட்டது. அது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே கிட்டதட்ட முடித்துவிட்டது.
இவர் பெங்களூருவில் உள்ள தேசிய கல்லூரியில் தனது பட்டப்படிப்பை படித்தார். அப்போது இவருக்கு அரசியல் மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் மாணவர் அணியில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர் 2014-ஆம் ஆண்டு இந்தியன் யூத் காங்கிரஸ் பிரிவின் பொது செயலாளராக பதவி வகித்தார். 2020-ஆம் ஆண்டு இந்தியன் யூத் காங்கிரஸ் அணியின் தலைவராக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பின் முதல் அலையில் இவர் கர்நாடகாவில் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தொடங்கியுள்ளார்.
அதன்பின்னர் முதல் அலை முடியும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக இந்தியாவில் வரக்கூடும் என்பதால் அதற்கு தயாராக இருக்கும்படி இவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க தன்னுடன் 1000 யூத் காங்கிரஸ் நபர்களை சேர்த்து ஒரு அணியை இவர் உருவாக்கியுள்ளார். அந்த அணியின் மூலம் நிவாரணம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதற்கான திட்டமிடல் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். இந்த முன்னேற்பாடுகளால் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலையில் இவர்கள் உதவி செய்ய முடிகிறது.
குறிப்பாக டெல்லியில் 3 வயது குழந்தை ஒன்றுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என்பதை அறிந்தவுடன் இவருடைய அணி டெல்லியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அழைந்து ஆக்சிஜன் கான்சென்டிரெட்டரை பெற்று தந்தது. இதை பலரும் பாராட்டினர். இதேபோல கடந்த வாரம் நியூசிலாந்து தூதரகத்திற்கு ஏற்பட்ட ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்தார்.
அதைபோல் இரண்டாவது அலையில் கர்நாடகா மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களும் தேவை உள்ளவர்களுக்கு இவருடைய அணி அனைத்து நிவாரண உதவிகளையும் செய்து வருகிறது. ஒருநாளைக்கு வெறும் 5 மணிநேரம் மட்டும் தூங்கும் ஶ்ரீனிவாஸ் இன்னும் நிறையே மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறார். களத்தில் இறங்கி வேலை செய்வது இவருக்கு புதிதல்ல என்று இவருடைய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால், 2012-ஆம் ஆண்டு கர்நாடகாவில் யூத் காங்கிரஸ் பிரிவின் அலுவலகத்திற்கு வெளியே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் களத்தில் இறங்கி தனி ஆளாக செயல்பட்டு தண்ணீரை வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவர் எடுத்துள்ளார். கிரிக்கெட் களத்தில் தனியாக இறங்கி ஒரு வீரர் எப்படி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வாரோ, அந்தவகையில் ஶ்ரீனிவாஸ் நிஜ வாழ்க்கையில் களமிறங்கி வருகிறார். இவருடைய உதவி பயணம் பலரை சென்று சேர வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.