கொரோனா 2-வது பேரலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. எங்கு பார்த்தாலும் மருத்துவ தேவை இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது என்ற செய்திகள்தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது. இதோடு மட்டுமில்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடம் இல்லாமல் ஆம்புலன்சிலேயே காத்திருந்த நிலை ஏற்பட்ட நிலையில், தற்போது ஆம்புலன்ஸ் வசதியும் முறையாக இல்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், மருத்துவமனை வாசலிலே உயிருக்காக போராடுபவர்களை பார்க்கும் யாராக இருந்தாலும் நிச்சயம் கண்களில் கண்ணீர் ததும்பும். அதுவும் கொரொனாவினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை அது வேதனையின் உச்சம். இந்த சூழலில் என்ன செய்வது என்று நிர்கதியாக நிற்கும் குழந்தைகளை காக்க மத்திய பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. இங்கு கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக பெற்றோர்களை இழந்திருக்கும் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதோடு பெற்றோர்கள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு மாத ஓய்வு ஊதியமாக ரூ. 5000 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ள முதல்வர், இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும் பெருந்தொற்றினால் வருமானமின்றி தவிக்கும் நிலையில், வேலைசெய்ய விரும்பும் நபர்களுக்கு அரசாங்க உத்தரவாதத்தின் அடிப்படையில் கடன்களை வழங்குவதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நிச்சயம் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கும் என நம்புவதாக அரசு முதல்வர் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கை குறித்து, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவிக்கையில், பெருந்தொற்றினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளைக்கு நலத்திட்ட உதவிகளை உதவும் முதல் மாநிலம் மத்தியபிரதேசம் தான் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்களுக்கான அனைத்து தேவைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.
மேலும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நேற்று மட்டும் 8970 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 84 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 7 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6679 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினமும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த நிலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இருந்த போதும் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் விநியோகம் முறையாக இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தொடர் உயிரிழப்புகளும் அரங்கேறிவருகிறது.