ரயில்வேயில் வேலை வாங்கித் தர நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத், அவரது மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, அவர்களது மகள் மிசா பார்தி மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான, 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.


ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம்


கடந்த 2004 - -2009ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது பீஹாரைச் சேர்ந்த சிலருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தர லாலு குடும்பத்தினர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. ரயில்வே பணியமர்த்தலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் அவர்களுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.


"பாட்னா, உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மற்றும் தெற்கு டெல்லியின் ஆடம்பரமான நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியின் டி-1088 இல் உள்ள நான்கு மாடி பங்களா உட்பட ஆறு அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் ஒரு தற்காலிக உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது" என்று ED செய்தி தொடர்பாளர் கூறினார்.



எந்தந்த நிலங்கள் யார்யார் பெயரில்


"இணைக்கப்பட்டுள்ள சொத்துக்களில் பாட்னாவில் உள்ள மஹுபாக்கில் (டானாபூர்) உள்ள இரண்டு நிலங்களும் அடங்கும். அவற்றில் ஒன்று ராப்ரி தேவி மற்றும் ஏ கே இன்ஃபோசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (லாலு பிரசாத்தின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் நிறுவனம்) பெயரிலும் மற்றொன்று பாட்னாவின் பிஹ்தா பகுதியில் உள்ளது மிசா பார்திக்கு சொந்தமான நிலம்" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.


"காஜியாபாத்தின் சாஹிபாபாத் தொழிற்பேட்டையில் உள்ள இரண்டு தொழில் மனைகளின் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது (வினீத் யாதவ் மற்றும் பிரசாத்தின் மகள் ஹேமா யாதவின் கணவர் மற்றும் மாமனார் சிவ குமார் யாதவ் ஆகியோரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட தலா ஒரு ப்ளாட்)" என்று நிறுவனம் கூறியது.


தொடர்புடைய செய்திகள்: Tomato Ration Shop: மக்களே சூப்பர் நியூஸ்.. இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.. உடனே போய் தக்காளி வாங்குங்க..


போலி நிறுவனம்


“ஏ பி எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது பிரசாத்தின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் மகள் சந்தா யாதவ் ஆகியோருக்கு சொந்தமான போலி நிறுவனம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பதிவு செய்யப்பட்ட முகவரி நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள பங்களா ஆகும். இந்தச் சொத்துக்கள் அனைத்திற்கும் ஒட்டுமொத்த மதிப்பாக கூறப்படுவது ரூ.6.02 கோடி. 7 நிலங்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ரயில்வேயில் குரூப் டி வேலைகளை அளித்ததாக லாலு பிரசாத், ராப்ரி தேவி மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ எஃப்ஐஆர் மூலம் ED வழக்கு உருவாகியுள்ளது" என்றார்.



சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து விமர்சனம்


எதிர்க்கட்சி தலைவர்களை "பொய் வழக்குகளில்" குறிவைப்பதற்காகவே ED தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுகிறது என்று பாஜக தலைமையிலான மத்திய அரசை RJD சாடியது. RJD எம்பியும் செய்தித் தொடர்பாளருமான மனோஜ் ஜா, லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான விசாரணையைப் பற்றி ஊடகங்களில் அமலாக்கத்துறை கதைகளை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார்.


மேலும் எதிர்கட்சித் தலைவர்களை குறிவைத்து இவ்வாறு செய்ய அந்த ஏஜென்சியின் தலைவருக்கு அரசாங்கம் நீட்டிப்பு கோரியுள்ளது என்று கூறினார்.