தெருநாய்கள் தாக்குதல் குறித்த சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் சாக்கில் கட்டப்பட்டு கிடந்த 31 தெருநாய்கள் மீட்கப்பட்டுள்ளன.


அசாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் நேற்று (செப்.16) குருவாபாஹி எனும் பகுதியில் சாலையோரத்தில் கால்கள் மற்றும் வாய்கள் கட்டப்பட்டு, சாக்குகளில் அடைக்கப்பட்ட நிலையில் 31 கடத்தல் நாய்களை கிடந்துள்ளன.


இந்த நாய்களை பொகாகாட் பொறுப்பாளர் தலைமையிலான குழு மீட்டுள்ள நிலையில், நாகலாந்து மாநிலத்துக்கு இந்த நாய்கள் கடத்தப்படவிருந்ததாக காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


 






மேலும்,  நாய்களைக் கடத்திச் சென்றவர்கள் தங்கள் வாகனத்தில் பழுது ஏற்பட்டு நாய்களை அங்கேயே விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


கேரளா சம்பவங்கள்


முன்னதாக இதேபோல் கேரளாவில் தெருநாய் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரியில் உள்ள பெருன்னா என்ற இடத்தில் தெருநாய் ஒன்று முன்னதாக தூக்கிலிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து செய்திகளில் வெளியாகி வரும் நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


பெருன்னாவில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு அருகே இந்த நாய் கண்டெடுக்கப்பட்ட நிலையில், முன்னதாக நாய்க்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அப்பகுதி மக்கள் அதனை நல்லடக்கம் செய்தனர்.


இதேபோல், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கடுதுருத்தி அருகே உள்ள மூலக்குளம் பஞ்சாயத்தில் கிட்டத்தட்ட 12 தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த செய்தி முன்னதாக  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அச்சம்பவம் முடிந்து ஒரு நாள் கழித்து இந்தச் சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.


இந்நிலையில் பெருன்னாவில் கொல்லப்பட்ட நாய் தொடர்ந்து பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்ததாக உள்ளூர்வாசிகள் முன்னதாகத் தெரிவித்துள்ளனர்.


 






தெரு நாய்களின் தாக்குதல் தொடர்பான செய்திகள் நாடு முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன. நாய்கடியால் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. முன்னதாக இதேபோல் தெருநாய்களின் தாக்குதலில் இருந்து இரண்டு சிறுவர்கள் நூலிழையில்  தப்பிய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.