தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் 1951 முதல் 22 ஆண்டுகளுக்கு மேல் பெரியார் தங்கி இயக்கப் பணியாற்றியுள்ளார். தனது இறுதிப் பேரூரையை நிகழ்த்திய அவரது வாகனம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. திருச்சியில் தங்கிய பெரியார் திருச்சிக்கு செய்த கொடைகளும் வரலாற்று நிகழ்வுகளும் ஏராளம். குறிப்பாக, திருச்சியில் அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெற வேண்டும் நோக்கத்தோடு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய 1965ம் ஆண்டு சுமார் 27 ஏக்கர் நிலத்தையும் ரூ.5.50 லட்சம் நிதியும் கொடுத்துள்ளார். முதலில் அரசு கலை அறிவியல் கல்லூரி என்று அறிவிக்கப்பட்டு பின்னர் பெரியார் ஈ.வெ.ரா கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியாக தொடர்கிறது. குழந்தைகளின் மீது பேரன்பு கொண்ட பெரியார் 1959ம் ஆண்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தை திருச்சியில் தொடங்கினார். பொதுக் கூட்டங்களுக்கு சென்று விட்டு, இரவு எப்போது வீடு திரும்பினாலும் இந்த குழந்தைகளைக் கொஞ்சி, மகிழ அவர் தவறியதில்லை. திருச்சி கே.கே.நகரில் பெரியார் மணியம்மை நூற்றாண்டு கல்வி வளாகத்தில் செயல்பட்டு வரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லம் முதலில் 13 குழந்தைகளோடு தொடங்கப்பட்டது.
தற்போது வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி, படித்து பல்வேறு நிலைகளுக்கு சென்றுள்ளனர். குழந்தைகளின் மீதுள்ள பிரியத்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ. 1 லட்சம் நன்கொடை கொடுத்து குழந்தைகள் மருத்துவப் பிரிவைத் தொடங்க உதவினார். பெரியார் மணியம்மை குழந்தைகள் நலப்பிரிவு இப்போதும் உள்ளது. இதைத் தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு தொடங்கவும் ரூ. 1 லட்சம் அளித்துள்ளார்.
மேலும் சமூகத் தொண்டிற்கு மட்டுமல்ல அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் திருச்சியில் நிகழ்ந்துள்ளன. தி.கவில் இருந்து பிரிந்து 1949ம் ஆண்டு திமுகவைத் தொடங்கிய அண்ணா, 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சரானார். முன்னதாக திருச்சி புத்தூர் மாளிகையில் இருந்த பெரியாரைச் சந்தித்து, இந்த ஆட்சி பெரியாருக்கு காணிக்கை என்று அண்ணா சொன்னார். இது அந்த காலகட்டத்தில் முரண்பட்டு இருந்த தி.க - திமுகவினரைச் நெகிழச் செய்த நிகழ்வாகவும் அமைந்தது. தொடர்ந்து 1967ம் செப்டம்பர் 17ம் தேதி பெரியாரின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் (தற்போதுள்ள மத்திய பேருந்து நிலையம் உள்ள பகுதியில்) பெரியாருக்கு சிலை திறக்கப்பட்டது. பெரியார் வாழ்ந்த போது பெரியாருக்கு வைக்கப்பட்ட முதல் சிலை இதுதான் என்கிறார்கள். முதலமைச்சராக இருந்த அண்ணா தலைமையில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர் விழாவில் பங்கேற்று பெரியார் சிலையை திறந்து வைத்தார்.
குறிப்பாக பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அறிவுலக மேதை, சமுதாய சிற்பி, பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் என்று போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி மொத்தம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள் வாழ்ந்தார். தன் வாழ்நாளில் 8,200 நாட்கள் சுற்றுப் பயணத்தில், மொத்தம் 8.20 லட்சம் மைல்கள் தூரம் பயணித்து, 10, 700 பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று, 21, 384 மணி நேரம் பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளார். ரஷ்யா உள்ளிட்ட 23 வெளிநாடுகளுக்கும் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஈரோட்டில் பிறந்தாலும் திருச்சி பெரியாரின் வாழ்க்கையிலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. சிக்கனத்திற்கும் சேமிப்பிற்கும் பெயர் பெற்ற பெரியார், தனக்கென்றால் சிக்கனம். சமூகத்திற்கு என்றால் வள்ளல் என்பதை எடுத்துச் சொல்லும் நிகழ்வுகள் திருச்சியில் நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.