ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சங்கராந்தி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. மொத்தம் 3 நாட்கள் சங்கராந்தி கொண்டாடப்படுகின்றது. போகியுடன் தொடங்கிய சங்கராந்தி விழா இன்று கனுமுடன் நிறைவடைகிறது. கால்நடைகளை பக்தியுடன் வழிபட்டு சங்கராந்தியை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கிராமங்களில் ஜல்லிக்கட்டு மஞ்சு விரட்டு போன்ற போட்டிகள் நடத்தப்படுவதால் ஆரவாரமாக காணப்படுகிறது.
மகர சங்கராந்தி:
கடந்த ஆண்டு சங்கராந்தியின் போது, புது மருமகனுக்கு உறவினர்கள் தடபுடலாக உபசரித்ததை இன்னும் கோதாவரி மாவட்ட மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு, சங்கராந்திக்கு வீட்டுக்கு வந்த மருமகனுக்கு 173 உணவுகள் உபசரிக்கப்பட்டது. உணவு பரிமாறப்பட்டதன் வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது . இப்போது விசாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. விருந்தோம்பலில் தங்களை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் கடலோர மக்கள்.
சங்கராந்தியை முன்னிட்டு, அனகாப்பள்ளியில் ஒரு மாமியார் வீட்டில் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு, 300 வகை உணவுகளுடன், விருந்தளித்தனர். அனகாப்பள்ளியில் வசிக்கும் அரிசி வியாபாரியின் மகள் ரிஷிதாவுக்கும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தேவேந்திரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து முதல் சங்கராந்தி பண்டிகைக்கு வீட்டுக்கு வந்த தேவேந்திரனுக்கு 300 விதமான உணவுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
250 வகை உணவுகள்:
இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள சித்தூர்பு கிராமத்தைச் சேர்ந்த ஜி சாய்நாத்தின் குடும்பத்தினர் தங்கள் மருமகனுக்கு 250 சுவையான உணவுகளை சமைத்து பரிமாறினர். புதுமணத் தம்பதிகள் ரேவந்த்-நவ்யாவுக்கு இது மறக்க முடியாத விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாக மாமியார் வீட்டில் மருமகனுக்கு வகைவகையான விருந்துகளை பரிமாறி அதை சோஷியல் மீடியாக்களில் வைரலாக்குவது ட்ரெண்டாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் கலாய்த்தும் கொண்டாடியும் வருகின்றனர். இப்படிப்பட்ட மாமியார் கிடைப்பது வரம் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக இருந்தாலும், விளம்பரத்திற்காகவே இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகளை பரிமாறுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க
Pongal 2024: நெல்லையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்