தமிழர் திருநாளான தை திருநாளின் முதல் நாளான  நேற்றைய தினம் பொங்கல் பண்டிகையானது நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக விவசாயத்தை போற்றும் விதமாகவும், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தை திருநாளில் இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல்  விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மரியாதை செலுத்தி மாட்டுப் பொங்கல் விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


அதன்படி நெல்லை சி.என். கிராமத்தில் உள்ள ராஜகோபாலசாமி கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே கோசாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாடுகள், கன்று குட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாட்டு தொழுவை சுத்தம் செய்து, மஞ்சள் தெளிக்கப்பட்டு, மாடுகளுக்கு சந்தனம், குங்குமம், மாலைகள் அணிவிக்கப்பட்டு கோபுஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தொழுவில் விளக்கு வைத்து, மண்ணில் விளைந்த காய்கறிகளை படையல் இட்டு, பக்தர்களும், கோசாலை பராமரிப்பாளர்களும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மாடு கன்றுகளுக்கு பொங்கல் படையல் இட்டு மண்ணில் விளைந்த காய்கறிகள் கரும்பு உள்ளிட்டவைகளுடன் அரிசி, பருப்பு, வெள்ளம் உள்ளிட்டவைகளையும் மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.




அதே போல நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் கிராமத்தில் விவசாயிகள் பலர் மாடுகளை தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவராக எண்ணி  வளர்த்து வருகின்றனர். உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள், காலையில் எழுந்து மாடுகளை வணங்கி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். குறிப்பாக மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, புதிய சரடு கயிறுகள் மாட்டி, நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து அழகுபடுத்தினர். பின்னர் மாட்டுத் தொழுவத்தின் அருகாமையிலும், வீட்டின் முற்றத்திலும்  கால்நடைகள் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் மாடுகளின் கழுத்தில் கரும்பு, கண்ணுப்பூ, பனங்கிழங்கு, தேங்காய் போன்றவற்றை கட்டி மாட்டுப் பொங்கல் கொண்டாடினர், இது குறித்து விவசாயிகள் கூறும் பொழுது, நாங்கள் மாட்டுப் பொங்கலை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம், அதே போல் இந்த ஆண்டும் கொண்டாடி வருகிறோம், எங்கள் வாழ்வில் பொருளாதார மேம்பாட்டுக்கு பல்வேறு வகையில் இந்த கால்நடைகள் உதவி செய்கின்றனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பொங்கல் கொண்டாடி வருகிறோம் என்று தெரிவித்தனர். இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.