பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று உலகபுகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு:
நேற்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு சிறப்பாக கொண்டாடினர். இன்று உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது.
குறிப்பாக ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. அந்த வகையில், உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டோக்கன்பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு காலை முதல் மறு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு பின் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலமேடு மஞ்சமலையாற்றில் உள்ள நிரந்தர வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடங்களில் 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளது.
காளைகளும், காளையர்களும்:
போட்டியில் முதல் இடத்தில் சிறப்பாக களம் காணும் காளைக்கு முதல் பரிசாக ஒரு நிசான் கார் மற்றும் மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் கார் வழங்கபடுகிறது. 2 வது சிறந்த களம் காணும் காளைக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசுமாடும், 2 ஆம் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு Apache பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது.
போட்டியின்போது சிறப்பாக களம்கண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறப்பாக களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் பிரிட்ஜ், டிவி, கட்டில், சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. போட்டியின் தொடக்க நிகழ்ச்சியாக முதலில் கிராமத்தின் சார்பில் மரியாதை காளைகள் எனப்படும் 7 கரை காளைகள் அவிழ்க்கப்பட்ட பின்னர் போட்டியில் பங்கேற்கும் காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டது.
போட்டியை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது. போட்டியினை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகம் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காளைகள் வாடிவாசலுக்கு வரும் பிறவாடி பகுதிகளிலும், காளைகள் வாடிவாசலில் இருந்து செல்லும் காளை சேகரிப்பு இடத்தில் ( கலெக்சன் பாயிண்ட்) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மாடுபிடி வீரரகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க, போட்டி நடைபெறும் வாடிவாசல் முன்பாக 50 அடி வரை தேங்காய்நார் பரப்பபட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களிலான சீருடைகளில் ஒவ்வொரு சுற்றிற்கும் 50 மாடுபிடி வீரர்கள் வரை களமிறங்குவார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடர்ந்து காலை 7 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.