டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான அதிஷி, டெல்லியின் துணை நிலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால்:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமாக பதவி வகித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வந்தார்.
இவருக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது. எனினும் தலைமைச் செயலகம் செல்லக் கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், எந்த கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருந்தது.
இதனால், பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறைக்குச் செல்லும்போது கூட முதல்வர் பதவியைத் துறக்காத அர்விந்த் கெஜ்ரிவால், ஜாமினில் வெளியில் வந்தபிறகு, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
டெல்லி அரசியல்: இதையடுத்து, டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து கட்சி எம்எல்ஏக்கள் கூடி புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லியின் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.
இந்த கூட்டத்தில், அர்விந்த் கேஜ்ரிவால் அதிஷியின் பெயரை முதலமைச்சராக்க முன்மொழிந்துள்ளார். இதனை தொடர்ந்து, கல்வித்துறை அமைச்சரான அதிஷி சிங், சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லியில் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவை கெஜ்ரிவால் அவரது இல்லத்தில் சந்தித்து தனது ராஜினாமைா கடிதத்தை வழங்கினார்.
இதுகுறித்து அதிஷி கூறுகையில், "இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இது கட்சிக்கும் டெல்லி மக்களுக்கும் உணர்ச்சிகரமான தருணம். அதே நேரத்தில், கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். மேலும், தேர்தல் நடந்து, புதிய அரசிடம் உரிமை கோரும் வரை, டெல்லியை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.
அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வரை, முதலமைச்சராக அதிஷியே தொடர்வார் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்து வருகிறார்.