சுற்றுச்சூழல் அமைப்பின்படி இந்தியா பல்லுயிர் வாழும் இடமாகும். அரிய வகை தாவரங்கள், அரிய வகை விலங்குகள், அரிய வகை பறவைகள் இந்தியாவில் உள்ளது. சுற்றுச்சூழல் மாசு, மக்கள்தொகை பெருக்கம், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல காரணங்களால் பல அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகிறது.
மாயமான பாம்புகள், பல்லிகள்:
அரிய வகை உயிரினங்களை காக்கும் பொருட்டு மிருகக்காட்சி சாலைகளிலும், வனவிலங்கு சரணாலயங்களிலும் பாதுகாத்து வருகின்றனர். இந்த வகையில், மும்பையில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலைகளில் மிகவும் முக்கியமானது தாதர் சிவாஜிபாரக் பகுதியில் உள்ள மெரின் அகுவா மிருகக்காட்சி சாலை.
இங்கு பல வகை அரிய பாம்புகள், பல்லிகள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளது. இந்த நிலையில், இந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள பல லட்சங்கள் மதிப்பிலான பாம்புகள் மற்றும் பல்லிகளை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. பாம்புகள், பல்லிகள் மாயமானது தொடர்பாக அந்த மிருக்காட்சி சாலையின் ட்ரஸ்டி பிரித்விராஜ் பவார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
லட்சக்கணக்கான மதிப்பு:
பிரித்விராஜ் பவார் ஊழியரிடம் விலங்குகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து மிருகக்காட்சி சாலையின் உள்ளே ஊழியர்கள் பார்த்தபோது அங்கு விலங்குகள் மாயமாகி இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மிருகக்காட்சியின் தலைவர் யுவராஜ் மோகேவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணையில் ஆறு பாம்புகள், இரண்டு பந்து பாம்புகள், ரெட் டாயில் பாம்புகள், கார்பெட் பாம்பு, நீல நிற கண் கொண்ட பாம்பு ஆகியன மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 3 லட்சம் ஆகும். இதுதவிர அர்ஜெண்டினா தேகு வகையைச் சேர்ந்த ராட்சத பல்லி 2 மாயமாகியுள்ளது. அதன் மதிப்பு மட்டும் ரூபாய் 1 லட்சம் ஆகும். 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நீல நிற நாக்கு உள்ள ராட்சத பல்லி, 25 ஆயிரம் மதிப்புள்ள இகுவானா பல்லி ஒன்றும் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
தீவிர விசாரணை:
நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மிருக்காட்சி சாலை சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மிருகக்காட்சி சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? அரிய வகை உயிரினங்களை திருடியவர்கள் யார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரிய வகை உயிரினங்கள் மருந்துகளுக்காக வேட்டையாடப்படுவதும், கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்ந்து உலகம் முழுவதும் அரங்கேறி வருவதும், அதைத் தடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.