உலக நாடுகள் மீது மோசமான விளைவுகளை காலநிலை மாற்றம் ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.


துபாயில் வரலாறு காணாத கனமழை:


இந்த நிலையில், வறண்ட வானிலைக்கும் கடும் வெப்பத்திற்கும் பெயர் போன துபாயில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. பாலைவனத்திற்கு நிகரான தட்பவெப்ப நிலை கொண்டுள்ள துபாயின் பல்வேறு பகுதிகளில் தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், துபாயின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.


செயற்கை மழை காரணமாக துபாயில் இந்த மாதிரியான நிலை ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், மும்பையை துபாயுடன் ஒப்பிடும் விதமாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.


துபாயின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் வீடியோவை பகிர்ந்த  தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, "இது மும்பை அல்ல. துபாய்" என பதிவிட்டிருந்தார். கடும் வெள்ளத்தால் வாகனங்களை இயக்க முடியாமல் மக்கள் தவிப்பது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.


கலாய்த்து தள்ளிய ஆனந்த மஹிந்திரா:


ஆனந்த மஹிந்திராவின் பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் எதிர்வினையாற்றினர். அந்த வகையில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் வெளியிட்ட பதிவில், ஆனந்த மஹிந்திரா தவறாக ஒப்பிடுவதாக குறிப்பிட்டிருந்தார்.


 






"தவறான ஒப்பீடு. இவ்வளவு கனமழைக்காக துபாய் கட்டப்படவில்லை. இது, பெரும்பாலான நகரங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் மழை. சரியான ஒப்பீடு என்னவாக இருக்கும் என்றால் மும்பையில் திடீரென கடும் பனி பொழிந்தால் எப்படி இருக்கும். கடும் பனியை சமாளிக்கும் வகையில் மும்பை நகரம் திட்டமிடப்படவில்லை. பனிமூட்டம் நிறைந்த ஆஸ்லோவில் உள்ளவர்கள் மும்பையை கேலி செய்வார்களா?" என ஆனந்த மஹிந்திராவை சஞ்சீவ் கபூர் விமர்சித்தார்.


இதையும் படிக்க: Iran Israel Tensions: "இந்தியாவுக்கு பாதகமான விளைவு ஏற்படும்" ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்து முன்னாள் தூதர் எச்சரிக்கை!