அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ள உத்தர பிரசேதத்தில் அமைந்துள்ளது அமேதி தொகுதி. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தலில் (இடைத்தேர்தல் உள்பட) 13 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.


அமேதியில் தொடரும் சஸ்பென்ஸ்:


குறிப்பாக, நேரு குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டுதான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்பியான ராகுல் காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு, நடந்த தேர்தலில் அங்கு தோல்வி அடைந்தார்.


இருப்பினும், வயநாடு தொகுதியில் வெற்றிபெற்றதால் நாடாளுமன்ற உறுப்பினரானார். பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் (தற்போது மத்திய அமைச்சர்) தோல்வி அடைந்த ராகுல் காந்தி, இழந்த கோட்டையை மீட்டெடுக்க முனைப்பு காட்டி வருகிறார்.


வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.


ஸ்மிருதி இரானிக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் காங்கிரஸ்:


அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக நீடித்து வந்த சஸ்பென்ஸ்-க்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி, "இது பாஜகவின் கேள்வி. மிகவும் நல்லது. கட்சி மேலிடத்தில் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன்.


எங்கள் கட்சியில் இந்த (வேட்பாளர் தேர்வு) முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் கமிட்டியால் எடுக்கப்படுகிறது. நான் கட்சியின் படைவீரன். காங்கிரஸ் கமிட்டி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்றார்.


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த முறை போன்று இந்த முறையும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. உத்தர பிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.


முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், அமேதியில் வரும் மே 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடக்க உள்ளது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகிய விவகாரங்களை முன்வைத்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


இதையும் படிக்க: ABP CVoter Opinion Poll: I.N.D.I.A கூட்டணிக்கு அதிர்ச்சி.. மக்களிடம் எடுபட்டதா மோடி மேஜிக்.. சர்வே சொல்வது என்ன?