வால்நட்டின் மேல் ஓட்டை உடைப்பது எவ்வளவு கடினம் என்பதை பலருக்கும் தெரியும். அந்த பருப்பை உடைக்க நாம் வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துவோம். ஆனால் வால்நட்டை யாரும் தங்கள் தலை யால் உடைப்பதில்லை, அப்படி உடைப்பதை பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் அப்படி உடைத்தே ஒருவர் கின்னஸ் ரெக்கார்டு செய்துள்ளார் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!


தலையால் வால்நட் உடைக்கும் நபர்


ஆம், வால்நட் பருப்பை தலையால் உடைத்து இந்தியர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். 27 வயதான, இந்திய தற்காப்புக் கலைஞர் நவீன் குமார், ஒரு நிமிடத்தில் தலையால் அதிகபட்ச வால்நட்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். அவர் ஒரு நிமிடத்தில் 273 வால்நட் பருப்புகளை உடைதுள்ளார். கணக்குப்படி பார்த்தால் ஒரு வினாடிக்கு, 4.5 க்கும் அதிகமான பருப்புகளை உடைத்துள்ளார் என்று கின்னஸ் உலக சாதனை இணையதளம் செய்தி வெளியிட்டது.



பல ஆண்டுகளாக நடந்து வரும் போட்டி


இதற்கு முன் 254 பருப்புகளை பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது ரஷித் உடைத்து சாதனை படைத்திருந்தார். இந்த இருவரும் பல ஆண்டுகளாக சாதனைக்காக சண்டையிட்டு வருகின்றனர். கின்னஸ் இணையதளத்தின்படி, ரஷித் முதன்முதலில் 2014 இல் மொத்தம் 150 வால்நட்களை உடைத்து சாதனை படைத்தார், அதற்கு பின் 2016 இல் மொத்தம் 181 வால்நட்களை உடைத்து அதனை அவரே முறியடித்தார்.


தொடர்புடைய செய்திகள்: IND vs WI 2nd t20: சீறிப்பாய்ந்த திலக் வர்மா, புஸ்வானமான இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்கள்.. மே.தீவுகளுக்கு 153 ரன்கள் இலக்கு


நேருக்கு நேர் மோதிய போட்டி


பல தற்காப்பு கலை சாதனைகளை தன்னகத்தே வைத்திருக்கும் சக இந்தியரான பிரபாகர் ரெட்டியிடம் பயிற்சி பெற்ற பிறகு 2017 இல் நவீன் குமார் இந்த போட்டிக்குள் நுழைந்தார். நவீன் 217 வால்நட்களை உடைத்து ரஷித்தின் சாதனையை முறியடித்தார். இந்த நிலையில் அதற்கு ஒரு வருடம் கழித்து, இந்த ஜோடி இத்தாலியில் 'லா நோட் டெய்' ரெக்கார்ட் தொகுப்பில் பருப்பு உடைக்கும் போட்டியில் நேருக்கு நேர் மோதியது. அவர்கள் இருவருமே ஏற்கனவே இருந்த சாதனையை முறியடித்தனர். நவீன் 239 பருப்புகள் உடைதிருந்தார். ஆனால் ரஷித் 254 வால்நட்களை உடைத்து முதலிடம் பிடித்தார்.






கின்னஸ் வெளியிட்ட விடியோ


இப்போது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையின் மூலம், நவீன் வால்நட் உடைப்பதில் தான்தான் உலகில் முதன்மையான மனிதர் என்று தன்னை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியைக் காட்டும் வீடியோவை ட்விட்டர் X இல் கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ பக்கம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் நவீன் வேகமாக அடுக்கிவைக்கபட்டுள்ள வால்நட்களை உடைத்துக்கொண்டே செல்கிறார். இந்த வால்நட்களை வீன் செய்யாமல், கிருஷ்ணா கான்சியஸ்னஸ் சர்வதேச சங்கத்திற்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.