மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி, 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


டி-20 தொடர்:


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியுற்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி களமிறங்கியது.


இந்திய அணி பேட்டிங்:


புரொவிடென்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சுப்மன் கில் வெறும் 7 ரன்களில் நடையை கட்ட, நிதானமாக விளையாடிய இஷான் கிஷான் 23 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனிடையே, நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் வெறும் 1 ரன் மட்டும் எடுத்திருந்த நிலையில், ரன் - அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.


நம்பிக்கை அளித்த திலக் வர்மா:


ஒருபுறம் அடுத்தடுத்து விக்கெட் சரிந்தாலும், இளம் வீரரான திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசிய அவர், 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 51 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். சர்வதேச போட்டிகளில் திலக் வர்மா அடித்த முதல் அரைசதம் இதுவாகும். இதனிடையே, சஞ்சு சாம்சன் வெறும் 7 ரன்களை மட்டும் சேர்த்து பெவிலியன் திரும்பினார். 


இறுதிகட்டத்தில் ரன் சேர்ப்பு:


இறுதிக்கட்டத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சீரான இடைவெளியில் 2 சிக்சர்களை விளாசினார். இருப்பினும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அக்‌ஷர் படேலும் 14 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஹொசைன், அல்ஜாரி ஜோசப் மற்றும் ஷெபர்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து, 153 ரன்கள் என்ற இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி எட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்ற மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே போதுமானது. அதேநேரம், இந்த போட்டியில் இந்திய அணி ஒருவேளை தோல்வியுற்றால், தொடரைக் கைப்பற்ற மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, இன்றைய போட்டியில் வென்று தொடரில் 1-1 என சமநிலையை அடைய இந்திய அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.