பெரும் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த சுதந்திரத்தை தக்க வைத்து கொள்ள அடுத்த சவாலுக்கு தயாரானது உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியா. ஆங்கிலேயர்கள் விட்டு சென்றபோது, எழுத்தறிவு உள்ளவர்கள் இந்தியாவில் சொற்ப எண்ணிக்கையில்தான் இருந்தனர். வெறும் 12 சதவிகிதத்தினர் மட்டுமே எழுத்தறிவு உள்ளவர்களாக இருந்தனர். மூன்று வேளை உணவு கூட இல்லாமல் இருந்தவர்கள், இங்கு அதிகம். 70 சதவிகித மக்கள் ஏழ்மையில் சிக்கி தவித்தனர். இப்படிப்பட்ட, நாட்டில் எல்லாம் ஜனநாயகம் நீடிக்காது. சர்வாதிகாரம்தான் ஓங்கும் என மேற்குலக நாடுகளின் வரலாற்றாசிரியர்கள் எழுதுகின்றனர்.


நெருக்கடியான காலகட்டம்:


நெருக்கடியான சூழலில், 1951ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்த திட்டமிடுகிறார் பிரதமர் ஜவஹர்லால் நேரு. ஆனால், அதில் பல சவால்கள் அடங்கியிருந்தது. வாக்களிக்கும் முறை பற்றி தெரியாதவர்களே பெரும்பான்மை மக்களாக இருந்தார்கள். அதேபோல, 
இந்திய மக்கள் தொகையில் 14 சதவிகிதத்திற்கு மேலான மக்கள் ஒரே சமயத்தில் வாக்களித்ததே இல்லை. எனவே, தேர்தலை ஏற்பாடு செய்வதற்கு பெரும் மனிதவளம் தேவைப்பட்டது. அதே சமயத்தில், தற்போது இருப்பது போன்று போக்குவரத்து வசதிகள் எல்லாம் அப்போது இல்லை. எனவே, அனைத்து பகுதிகளுக்கும் வாக்கு பெட்டிகளை எடுத்து செல்வதே கடினமாக இருந்தது. இப்படி, சவால்களை சொல்லிக் கொண்டே போகலாம். 


எனவே, தேர்தலை தள்ளிபோடுமாறு நேருவிடம் நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென் அறிவுறுத்துகிறார். ஆனால், எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருந்த நேரு, ஒரே வருடம் தான் கால அவகாசம் தருகிறார். கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தேர்தலை நடத்தி முடிப்பது என்பது இமாலய இலக்காக இருந்தது. ஆனால், அந்த சவாலை ஏற்று கொண்டு, அயராத உழைக்கிறார் சுகுமார் சென்.


1951-52 காலக்கட்டத்தில், தற்போது இருப்பது போல 18 வயதில் (1988ஆம் ஆண்டுக்கு பிறகுதான் 18 வயதான அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுகிறது) வாக்குரிமை அளிக்கப்படவில்லை. அப்போது, 21 வயது அல்லது அதற்கு மேலான வயதுடையவர்களே வாக்களிக்க தகுதியானவர்கள். அப்போது, 17 கோடியே 60 லட்ச இந்தியர்கள், 21 வயதை நிரம்பியவர்களாக இருந்தனர். ஆனால், அதில் 85 சதவிகிதம் பேருக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. எனவே, அவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டியிருந்தது.


பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட தேர்தல்:


அதேபோல மக்களவையுடன் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தது. எனவே, சுகுமார் சென்னுடன் இணைந்து, பல்வேறு மாகாணங்களின் தேர்தல் ஆணையர்கள் பணியாற்றினர். பெரும் சவால்களுக்கு மத்தியில் 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. பல்வேறு கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு, 1952ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி நாடு முழுமைக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது.


உலகின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் மொத்தம் 53 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. மொத்தம் 401 தொகுதிகள். சில தொகுதிகளில் இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்யும் முறை பின்பற்றபட்டதால் (1960களில் இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது), மொத்தம் 489 இடங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.  பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 1874 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 


அனைவரும் எதிர்பார்த்தபடியே, நாட்டின் முதல் தேர்தலில் மிக பெரிய வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்தது. இரண்டாவது பெரிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (சிபிஐ) காட்டிலும் நான்கு மடங்கு அதிக வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. மொத்தம் 364 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜன சங் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. கிட்டத்தட்ட 45% வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருந்தது.


தேர்தலுக்கு முன், 1951ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், போலி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஏனெனில், நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் மக்களவையில் நியமன உறுப்பினர்களாக இருந்தனர்.
நேரு, லால் பகதூர் சாஸ்திரி, சுசேதா கிருபலானி, குல்சாரி லால் நந்தா, காகாசாகேப் காலேல்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள், முதல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.


அம்பேத்கர் அடைந்த தேர்தல் தோல்வி:


பம்பாய் (வட-மத்திய) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயண் சதோபா கஜ்ரோல்கரிடம் அம்பேத்கர் தோல்வியடைந்தார். பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு (கட்சி) வேட்பாளராக அம்பேத்கர் போட்டியிட்டார். ஆச்சார்யா கிருபலானியும் உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் தொகுதியில் தோல்வியடைந்தார்.


பாரதிய ஜனசங்கம் ஷியாம பிரசாத் முகர்ஜி தலைமையில் தேர்தலை சந்தித்தது. சோசலிஸ்ட் கட்சி, ராம் மனோகர் லோஹியா மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில் தேர்தலை சந்தித்தது. கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி ஆச்சார்யா கிருபலானி தலைமையில் தேர்தலில் களம் கண்டது.


முதல் மக்களவையில் மொத்தம் 677 அமர்வுகள் நடைபெற்றது. அதன் பதவிக்காலம் 1957ஆம் ஆண்டு நிறைவடைந்தது. முதல் மக்களவை சபாநாயகராக சி.வி. மாவலங்கர் தேர்வு செய்யப்பட்டார். சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் நாடாளுமன்றத்தில் நுழைந்தவர் தெலங்கானாவைச் சேர்ந்த ரவி நாராயண ரெட்டி. இவர், மக்கள் ஜனநாயக முன்னணியில் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். முதல் பொதுத் தேர்தலில் நேருவை விட இவர் அதிக வாக்குகள் பெற்றிருந்தார். உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் கிழக்கு (பின்னர், புல்பூர் என பெயர் மாற்றப்பட்டது) தொகுதியில் போட்டியிட்ட நேரு, தான் இறக்கும் வரையில் அந்த தொகுதியில் இருந்தே மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.