”தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின்படி 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை இந்திய விமான நிலைய ஆணையம் 25 விமான நிலையங்களை குத்தகைக்கு ஒதுக்கியுள்ளது.
இவற்றில் செயல்பாடு, மேலாண்மை, நீண்டகால குத்தகை அடிப்படையில் மேம்பாட்டிற்காக டெல்லி, மும்பை, அகமதாபாத், கவுகாத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய எட்டு விமான நிலையங்களை பொது, தனியார் கூட்டாண்மை மூலம் குத்தகைக்கு ஒதுக்கியுள்ளது.
இவற்றில் டெல்லி, மும்பை ஆகிய விமான நிலையங்கள் 2006ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் டெல்லி விமான நிலையம் மூலம் சுமார் ரூ.5,500 கோடியும், மும்பை விமான நிலையம் மூலம் ரூ.5,174 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டது” என மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜென்ரல் விகே சிங் தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் அதில் கிடைக்கும் வருவாயை, அனைத்து விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு உபயோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், லண்டனில் இந்திய ஜனநாயகம் பற்றி ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து அமளி எழுந்த நிலையில், மக்களவையும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பாஜக உயர்மட்டத் தலைவர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல், அனுராக் தாக்கூர் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களும் இன்று காலையே ஆலோசனையில் ஈடுபட்டனர். அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல் ஆகியவை பற்றி கேள்வி எழுப்ப அவர்கள் முடிவு செய்த நிலையில் இந்தக் கூட்டம் மல்லிகார்ஜுன் கார்கே அலுவலகத்தில் நடைபெற்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.