Parliament Rahul Gandhi : ”வெட்கக்கேடானது” ராகுல் காந்தியை தாக்கி பேசிய மத்திய அமைச்சர்கள்...பதிலடி தந்த எதிர்க்கட்சிகள்..முதல் நாளே முடங்கிய நாடாளுமன்றம்

கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி திட்டமிட்டபடி இன்று தொடங்கியுள்ளது. தொடங்கிய உடனே, ஆளும் கட்சி உறுப்பினர்கள், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து எழுப்பினர். 

Continues below advertisement

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

Continues below advertisement

தொடங்கிய உடனே அமளி:

இந்நிலையில். கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி திட்டமிட்டபடி இன்று தொடங்கியுள்ளது. தொடங்கிய உடனே, ஆளும் கட்சி உறுப்பினர்கள், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து எழுப்பினர். 

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்த அவையில் உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, லண்டனுக்கு சென்று இந்தியாவை அவமதித்தார். இவரின் இந்த அறிக்கையை இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும். நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

முடங்கி போன நாடாளுமன்றம்:

மக்களவையில் இந்த விவகாரத்தை ராஜ்நாத் சிங் எழுப்பிய நிலையில், மாநிலங்களவையில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "மூத்த தலைவர் ஒருவர் வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகத்தை அவமதித்தது வெட்கக்கேடானது" என்றார்.

மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த காங்கிரஸ், "பிரதமர் நரேந்திர மோடியும் வெளிநாடுகளில் முந்தைய. அரசுகளை அவமானப்படுத்தினார்" என தெரிவித்தது. மக்களவையின் மையத்திற்கு வந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட, மக்களவையும் மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஜனநாயகத்தை நசுக்கி அழிப்பவர்கள் அதைக் காப்பாற்றுவது போல பேசுகிறார்கள்" என்றார்.

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள்:

இந்த செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சி, கேசிஆரின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதிலும் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாகவே, இன்று காலை நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், இரு அவைகளிலும் ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் பாஜக உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, அனுராக் தாக்கூர் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களும், நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டனர். புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல், அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற பிரச்சனைகள் குறித்து எழுப்ப அவர்கள் முடிவு செய்தனர். இந்த கூட்டம் மல்லிகார்ஜுன் கார்கே அலுவலகத்தில் நடைபெற்றது.

Continues below advertisement