மலேசியா தலைநகர் கோலா லம்பூரில் இருந்து நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவுக்கு நேபாள ஏர்லைன்ஸின் ஏ-320 விமானம் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்துடன் ஏ-320 விமானம் கிட்டத்தட்ட மோதி விபத்துக்குள்ளாகவிருந்தது.


நடுவானில் அதிர்ச்சி:


ஏர் இந்தியா விமானம் 19,000 அடியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது நேபாள ஏர்லைன்ஸ் விமானம் அதே இடத்தில் 15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. நல்வாய்ப்பாக, ரேடாரில் இரண்டு விமானமும் அருகருகே சென்று கொண்டிருந்தது பதிவானது. இதையடுத்து, நேபாள ஏர்லைன்ஸ் விமானம் 7 ஆயிரம் அடி உயரத்தில் இயக்கப்பட்டது. இதனால், பெரும் விபத்து சம்பவம் தவிர்க்கப்பட்டது. 


இந்நிலையில், நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறையைச் சேர்ந்த மூன்று ஊழியர்களை கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி பணிநீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்தான், சம்பவம் நடந்தபோது விமான கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பாளர்களாக இருந்தனர்.


இது தொடர்பான அறிவிப்பை நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிரோலா வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அமைத்துள்ளது. அதேநேரம், இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


தொடர் சர்ச்சையில் சிக்கும் ஏர் இந்தியா:


சமீப காலமாக, ஏர் இந்தியா விமானம் தொடர்பாக பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.


இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வரும் சூழலில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்தது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்திய பயணி ஒருவர் சென்றார். அப்போது, குடிபோதையில் இருந்த அவர் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.


இதனால், ஏர் இந்தியா  நிறுவனத்திற்கு அபராதம் கூட விதிக்கப்பட்டது. இந்த சூழலில், ஏர் இந்தியா விமான பெரும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளது. 


மேலும் படிக்க: Priyanka Gandhi : நாட்டுக்கு போராடியதற்காக வெட்கப்பட வேண்டுமா? அம்மாவை அவமதித்தார்கள்...போராட்ட களத்தில் கொந்தளித்த பிரியங்கா காந்தி..!