ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.


நாட்டுக்கு போராடியதற்காக நாம் வெட்கப்பட வேண்டுமா?


அப்போது பேசிய பிரியங்கா காந்தி, "நீங்கள் (பாஜக) குடும்ப அரசியல் பற்றி பேசுகிறீர்கள். நான் உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். ராமர் யார்? அவர் குடும்பத்தை சேர்ந்தவர் இல்லையா? பாண்டவர்கள் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லையா?


என் குடும்பம் நாட்டுக்கு போராடியதற்காக நாம் வெட்கப்பட வேண்டுமா? எங்கள் குடும்பம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை ரத்தத்தால் வளர்த்தெடுத்தது. நாடாளுமன்றத்தில் எனது தந்தை அவமதிக்கப்பட்டார், எனது சகோதரருக்கு மீர் ஜாபர் போன்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் உங்கள் அமைச்சர்கள் எனது அம்மாவை அவமதித்தார்கள்.


உங்கள் முதலமைச்சர் ஒருவர் ராகுல் காந்திக்கு அவரது தந்தை யார் என்று கூட தெரியாது என கூறினார். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படிப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதில்லை. சிறையில் அடைக்கப்படவில்லை.


குடும்பத்தை பலமுறை அவமதித்தார்கள்:


வருடக்கணக்கில் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்துவதும் இல்லை. அவர்கள் என் குடும்பத்தை பலமுறை அவமதித்துள்ளனர். ஆனால், நாங்கள் அமைதியாக இருந்தோம். எனது சகோதரர் பிரதமர் மோடியிடம் சென்று அவரை நாடாளுமன்றத்தில் கட்டிப்பிடித்து, உங்கள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. நம்மிடம் வெவ்வேறு சித்தாந்தங்கள் இருக்கலாம். ஆனால், வெறுப்பு என்ற சித்தாந்தம் நம்மிடம் இல்லை என கூறினார்.


உலகின் தலைசிறந்த கல்வி நிலையமான ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி தனது கல்வியை முடித்தார்,  இருப்பினும், அவர்கள் அவரை 'பப்பு' என்று அழைக்கத் தொடங்கினர். ஆனால், அவர் ஒரு 'பப்பு' அல்ல. அவர் நேர்மையானவர். சாதாரண மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார்" என்றார்.


கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்து அவரின் அரசியல் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிபோட்டுள்ளது. அவதூறாக பேசியதாகக் கூறி, ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது சூரத் நீதிமன்றம். 


இதன் விளைவாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம், இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.


மூன்றாவது அணிக்கான முயற்சியை மேற்கொண்டு வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோர் தகுதி நீக்க விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடியிருந்தனர்.