கர்நாடகாவில் வரும் மே மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து:


அதன் ஒரு பகுதியாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டது.


அந்த நான்கு சதவிகித இடஒதுக்கீட்டை, கர்நாடகாவின் சமூக ரீதியாக செல்வாக்கு மிக்க சாதி பிரிவுகளான வீரசைவ லிங்காயத்திற்கும் வொக்கலிகாவுக்கும் பிரித்து வழங்கியது கர்நாடக பாஜக அரசு. இதன் மூலம், வொக்கலிகா பிரிவுக்கான இடஒதுக்கீடு 4 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும் வீரசைவ லிங்காயத்திற்கான இடஒதுக்கீடு 5 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 


இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'கரோட்டா ஷஹீத் ஸ்மாரக்' மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் நினைவிடத்தை திறந்து வைத்தார். மேலும், 103 அடி உயர தேசியக் கொடியை ஏற்றினார்.


அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை:


பின்னர், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். "மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி வழங்கப்படவில்லை.


காங்கிரஸ் அரசு தனது பிளவுவாத அரசியலால் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது.


வாக்கு வங்கியின் பேராசையில், சுதந்திர தியாகிகளையும், ஹைதராபாத்தை இந்தியாவில் இணைப்பதற்காக போராடிய தியாகிகளையும் காங்கிரஸ் ஒருபோதும் நினைவுகூரவில்லை. சர்தார் படேல் இல்லாவிட்டால் ஹைதராபாத் சுதந்திரம் அடைந்திருக்காது. பிடாரும் சுதந்திரம் அடைந்திருக்காது.


இந்த கோரடா கிராமத்தில், 2.5 அடி உயரமுள்ள மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக கொடூரமான நிஜாமின் ராணுவத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இன்று அதே மண்ணில் யாரும் மறைக்க முடியாத 103 அடி உயர மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளோம் என்பதை பெருமையுடன் சொல்கிறேன்.


அதே நிலத்தில் அந்த அழியா தியாகிகளின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 20 அடி உயர சர்தார் படேலின் சிலை, ஹைதராபாத்தில் இருந்து நிஜாமை வெளியேற்றியதில் நமது முதல் உள்துறை அமைச்சர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கின் அடையாளமாகும்" என்றார். 


மேலும் படிக்க: WPL Final: காத்திருக்கும் கோப்பை.. முத்தமிடப்போவது யார்? டெல்லி-மும்பை இறுதிப்போட்டியில் இன்று களம்..!