பிரதமர் மோடி ஒரு கோழை எனவும் அவர் அதிகாரத்தின் பின் ஒளிந்திருக்கிறார் என்றும் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.


காங்கிரஸ் போராட்டம்:


ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் கார்கே மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.


பிரதமரை சாடிய பிரியங்கா காந்தி:


போராட்டத்தின் போது பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியையும் அவரது தலைமையிலான பாஜக அரசையும் கடுமையாக சாடினர். அதன்படி, ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அதானி என்ற ஒரு மனிதனைக் காப்பாற்ற முயற்சிக்கிறது என சாடினார்.  நாங்களும் அமைதியாக இருந்து வருகிறோம். பொறுமைக்கும் எல்லை உண்டு. என் மேல் வழக்கு பதிவு செய்துகொள்ளுங்கள். என்னை ஜெயிலில் கூட போடுங்கள், உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்த நாட்டின் பிரதமர் ஒரு கோழை. திமிர் பிடித்தவன் என ஆவேசமாக பேசிய பிரியங்கா, அந்த திமிர்பிடித்த நபருக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவார்காள் என காட்டமாக பேசினார்.


”வெறுப்பு இல்லை”


இந்தியாவின் ஜனநாயகம் தனது குடும்பத்தின் ரத்தத்தால் வளர்க்கப்பட்டது. நாட்டிற்காக எங்கள் குடும்பம் தியாகம் செய்ததற்காக வெட்கப்பட வேண்டுமா, நம் குடும்பத்தின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற நாம் உழைக்க வேண்டாமா? எனது சகோதரர் பிரதமர் மோடியிடம் சென்று அவரை பாராளுமன்றத்தில் கட்டிப்பிடித்து, உங்கள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எங்களுக்கு வெவ்வேறு சித்தாந்தங்கள் இருக்கலாம், ஆனால் வெறுப்பு சித்தாந்தம் எங்களிடம் இல்லை.


திட்டமிட்ட சதி என சாடல்:


ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தவர், கடந்த ஆண்டு அந்த வழக்கை நிறுத்தி வைத்தார். ஆனால்,  மத்திய அரசிடம் பதில் இல்லாத கேள்விகளை ராகுல் கேட்டபோது, ​​அந்த குறிப்பிட்ட நபர் மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கின் நடவடிக்கைகளைத் தொடங்கினார். உண்மையில் முக்கியமான ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. ஆனால் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு உடனடியாக திறக்கப்பட்டதோடு,  ஒரு மாதத்திற்குள் விசாரணை முடிந்து ராகுலை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் கூட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். அதேநேரம், எங்கள் குடும்பத்திற்கு எதிராக பாஜகவினர் பலரும் ஏராளமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். எனது தந்தை, எனது தாயார் மற்றும் சகோதரை பலரும் அவமதித்துள்ளனர். அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பிரியங்கா காந்தி கடுமையாக பேசினார்.