தீபாவளி என்றால் பட்டாசு தான் ஸ்பெஷல். அதுவும் இளைஞர்களுக்கு சொல்லவே வேண்டாம். பட்டாசு வெடிப்பதை சிலர் சாகசமாகக் கருதுகின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்பது தெரிந்திருக்கவில்லை. அப்படி சாகசம் செய்த இளைஞர்கள் மறுநாள் உக்கி போட்டு ஊர்வலமாகச் சென்ற கதை நடந்துள்ளது.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் பட்டாசுக்கெல்லாம் தடை இல்லை. அதுமட்டுமல்லாத ஒரு வாரத்திற்கு போக்குவரத்து விதிமீறுபவர்களுக்கு ஃபைன் கிடையாது ரோஜா பூ தான் தருவோம் என்று அம்மாநில அமைச்சர் ஒருவர் அறிவித்திருந்தார். நம் இளைஞர்களின் சாகசக் கதைக்கு போகும் முன்னர் அமைச்சரின் ஆஃபரை அறிவோம்.


குஜராத் மாநிலம் சூரத் நகரில், 'பாதுகாப்பான தீபாவளி, பாதுகாப்பான நகரம்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 21 ஆம் தேதி முதல் வரும் 27 ஆம் தேதி நள்ளிரவு வரை, மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதிக்க மாட்டார்கள். ஹெல்மெட் அணியாமல், லைசென்ஸ் இல்லாமல் என போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்காமல் ரோஜா பூ கொடுத்து வாழ்த்துவார்கள். பண்டிகை காலத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அபராதம் கட்டுவதை விட சின்ன சின்ன பொருட்களை வாங்க மக்களுக்கு பயன்படுத்துவார்கள் என்பதால், மக்களின் நலன் கருதி இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. இதனால், யாரும் விதிகளை மீறலாம் என நினைக்காமல், பண்டிகை காலங்களில் கூடுதல் கவனத்துடன் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.






இதுபோதாதா நம்ம ஆட்களுக்கு, அரசு அளித்த சலுகையை அனுபவிக்க நினைத்தார்களோ என்னவோ அந்த இளைஞர்கள். தீபாவளிக்கு முதல் நாள் இரவு (அக்டோபர் 23) சொகுசுக் காரின் டாப், பானட் என ஏறக்கூடாத இடங்களில் ஏறிக் கொண்டு அதிலிருந்த வாறே பட்டாசுகளை வெடித்துச் சென்றனர். அதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்து சில இளசுகள் ஆஹோ ஓஹோ எனப் புகழ, பெருசுகள் ஐய்யோ எனப் பதற வீடியோ காவல்துறை கவனத்திற்கும் சென்றது. அவர்கள் இளைஞர்களை அடையாளம் காண முயற்சிக்க அவர்கள் தொக்காக மாட்டினார்கள். அடுத்தநாள் ஓரிடத்தில் போக்குவரத்து விதிமீறலுக்காக அவர்கள் சிக்கினர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த போலீஸார் சாலையில் காதைப் பிடித்துக் கொண்டு உக்கி போட வைத்தனர். அந்த டிப்டாப் இளைஞர்களும் பக்காவாக உக்கிபோட்டு நடந்தனர். அந்த வீடியோவை காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது நேற்று, இது இன்று என்று வடிவேலு பாணியில் வீடியோ கொலாஜ் போட்டு இணையத்தில் போஸ்டை வைரலாக்கியிருக்கிறது.


நம்மூர் ஸ்டைலில் சொல்லணும்னா 16 வயதினிலே பரட்டை சொல்வதுபோல் இது எப்படி இருக்கு ஸ்டைலில் தண்டனை இருந்தது.