மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ஹிங்கோட் எனப்படும் நெருப்பு பந்து எரியும் திருவிழாவில் சுமார் 30 பேர் காயமடைந்தனர்.


மத்தியப் பிரதேசம், இந்தூர், டெபால்பூரில் உள்ள கௌதம்புரா கிராமத்தில் நேற்று (அக்.26)  பாரம்பரிய விழாவான ஹிங்கோட் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற 30 பேர் காயமடைந்தனர்.


ஹிங்கோட் எனும் ஒரு வகை பழத்தைப் பறித்து உலர்த்தி அதில் வெடி மருந்தை நிரப்பி கொளுத்தி, அதனை ஒருவர் மீது ஒருவர் எறிந்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். 


இந்தூரில் நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த விழா ஆண்டுதோறும் தீபாவளியின் இரண்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது, ஆனால் இந்த ஆண்டு தீபாவளி முடிந்து மூன்றாவது நாளில் பின்பற்றப்பட்டது.


அதன்படி, நேற்று (அக்.26) மாலை கௌதம்புரா கிராமத்தில் 150 பேர் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது ஒருவரையொருவர் ஹிங்கோட் எறிந்து தாக்கியதில் ஏழு பேர் காயம் அடைந்தனர். 23 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.






இந்த பாரம்பரிய விழாவுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து முன்னதாகப் பேசிய துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் ரவிகுமார், "ஹிங்கோட் விழாவை ஏற்பாடு செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தால் ஒரு போலீஸ் படை, தீயணைப்பு படை மற்றும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.


விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக அனைத்து பக்கங்களிலும் வலைகள் அமைத்திருந்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.






கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஹிங்கோட் பாரம்பரிய விழா நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.