அடுத்தாண்டு நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 7 வாக்குறுதிகள் என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆரம்பமே அதிரடிதான்:
தேசிய தலைவநகரான டெல்லியை கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தர, ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது.
ஆனால், 48 நாட்களிலேயே தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். பின்னர், ஓராண்டு காலம் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி.
அன்றிலிருந்து இன்று வரை அங்கு ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிதான். 9 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக பதவி வகித்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் வழக்கு குற்றச்சாட்டின் காரணமாக, அந்த பதவியில் இருந்து விலகினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் 7 வாக்குறுதிகள்:
தற்போது, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அதிஷி முதலமைச்சராக உள்ளார். இந்த நிலையில், டெல்லி அரசின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளதால், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களுக்கும் மேல் உள்ள நிலையில், அதற்கு அதிரடிக்கு தயாராகியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. முதலில் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தற்போது, 7 வாக்குறுதிகள் என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால்.
அதன்படி, கட்டணம் இல்லா மின்சாரம், கட்டணம் இல்லா தண்ணீர், கட்டணம் இல்லா கல்வி, மொஹல்லா கிளினிக்குகளில் கட்டணம் இல்லா சிகிச்சை, பெண்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயணம், முதியோர்களுக்கான புனித யாத்திரை திட்டம், பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஒரு மாநிலத்தில் கூட இந்த இலவசங்கள் எதையும் வழங்கவில்லை. இதற்குக் காரணம் அவர்களிடம் எண்ணம் இல்லை. இந்த வசதிகளை எப்படி வழங்குவது என்பது ஆம் ஆத்மிக்கு மட்டுமே தெரியும்" என்றார்.