மும்பை மெரைன் ட்ரைவ் பகுதியில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் தாஜ் ஓட்டலை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த பிரம்மாண்ட ஓட்டல் உருவாக்கத்தின் பின்னணியில் ஓர் அழகான கதை இருக்கிறது. பழிவாங்கல் கதையை, எப்படி அழகானது என்று சொல்லலாம் என யோசிக்காமல் இதைப் படியுங்கள், நீங்களே அழகானது என்று சொல்வீர்கள்.
ஜேம்ஷெட்ஜி டாடா..
பிரிட்டிஷ் காலத்தில் வாட்ஸன்ஸ் ஹோட்டல் என்ற பிரபலமான ஓட்டல் மும்பையில் இருந்துள்ளது. அந்த ஓட்டலுக்கு ஒரு நாள் ஜேம்ஷெட்ஜி டாடா சென்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அவர் தனக்கான தனிப்பட்ட அவமானமாகக் கருதவில்லை. மாறாக ஒட்டுமொத்த இந்தியர்களும் அவமானப்படுத்தப்பட்டுவிட்டதாகவே கருதினார். அப்போதே அவர் ஒரு பெரிய ஓட்டல் அமைக்க வேண்டும் அதில் இந்தியர்களும் வெளிநாட்டவர்களும் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று கனவு கண்டார். அப்படித்தான் இந்தியாவின் முதல் சூப்பர் சொகுசு ஓட்டல் உருவானது.
அடிக்கல் நாட்டு விழா
மும்பையின் மெரைன் ட்ரைவ் கரையில் அமைந்திருக்கு தாஜ் ஓட்டல் கடற்கரையோரத்தில் ஒரு வைரம், ‘Diamond by the sea’ என்றே அழைக்கப்படுகிறது. 1898ல் தான் இந்த பிரம்மாண்ட ஓட்டலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. முதன்முதலாக இந்த ஓட்டல் 1902 டிசம்பர் 16ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. மும்பையில் முழுமையாக மின் விளக்குகளால் ஒளிர்ந்த முதல் கட்டிடமே தாஜ் மகால் பேலஸ் ஓட்டல்தான். டாஜ் மஹால் பேலஸின் புகழ்பெற்ற டவர் 1973ம் ஆண்டு திறக்கப்பட்டது.
தாஜ் ஓட்டலின் வரலாறு...
இந்த ஓட்டலுக்கு நீண்ட தனித்துவமான வரலாறு இருக்கிறது. இந்த ஓட்டலில் பல குறிப்பிடத்தக்க விருந்தினர்கள் தங்கியுள்ளனர். நாட்டின் தலைவர்கள் தொடங்கி பெரும் முதலாளிகள் வரை பலரும் இங்கு தங்கியுள்ளனர். 1929ல் பாகிஸ்தான் நிறுவனம் முகம்மது அலி ஜின்னாவின் 2வது மனைவி தனது இறுதி நாட்களை இந்த ஓட்டலில் கழித்தார். இரண்டாம் உலகப் போரின்போது இந்த ஓட்டல் 600 படுக்கை வசதிகள் கொண்ட ராணுவ மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 2008ல் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் மும்பை தாஜ் ஓட்டலும் ஓர் இலக்காக இருந்தது.
உலகின் மிக வலிமையான ஓட்டல் பிராண்டு..
உலகின் மிக வலிமையான ஓட்டல் பிராண்டுகளில் டாடா குழுமத்தின் இந்திய ஹோட்டல் கம்பெனி லிமிடட் நிர்வாகத்தில் இயங்கும் தாஜ் ஓட்டல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, 'பிராண்டு பைனான்ஸ்' ( Brand Finance) எனும், பிராண்டுகளை மதிப்பிடும் நிறுவனம், அதன், '2021ல் 50 ஓட்டல்கள்' எனும் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில், உலகின் மதிப்பு வாய்ந்த மற்றும் வலிமையான ஓட்டல்கள் தர வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில், ஒட்டுமொத்த பிராண்டு வலிமை குறியீட்டில், 100க்கு 89.3 மதிப்பெண் பெற்று, 'தாஜ்' ஓட்டல் முதலிடத்தை பெற்றுள்ளது. தாஜ் ஓட்டலின் பிராண்ட் மதிப்பு 2,200 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல், பிராண்ட் மதிப்பில், ட்ரிபிள் A எனும் மிகச் சிறப்பான தரத்தைப் பெற்றுள்ளது.