பிகில் திரைப்படக் காட்சிகளைக் காட்சிகளைக் காண்பித்து சாலை விபத்தில் பாதிக்கப்பட்டச் சிறுவனுக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பாராட்டினைப் பெற்றுள்ளது.
சிறுவர்களுக்குப் பிடித்தமான நடிகர்களில் விஜய்யும் ஒருவராக விளங்கிவருகிறார். தற்பொழுது இளம் வயதினர் அனைவரையும் கவரும் பிகில், மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் விஜய். “பிகிலு கப்பு முக்கியம் பிகிலு“ என்ற வசனங்களையெல்லாம் தற்பொழுது அதிகளவில் குழந்தைகள் தங்களது விளையாட்டுகளில் பயன்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான குழந்தைக்குப் பிகில் படத்தினைக் காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சையளித்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சென்னை மயிலாப்பூர் கணேசப்புரத்தைச்சேர்ந்த 10 வயதான ஷிவர்சன், கடந்த 6 ஆம் தேதி தனது உறவினர் அர்ஜூன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்துச்சென்றுள்ளார். பைக்கில் பின்னால் உட்கார்ந்து பயணித்தாலே அனைவருக்கும் தூக்கம் வந்துவிடும், அப்படித்தான் ஷிவர்ஷன் என்ற சிறுவன் பட்டிலா சாலை வழியாக பைக்கில் சென்ற போது தூங்கியுள்ளார். இதனால் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் சிறுவனுக்கு நெற்றி மற்றும் மூக்கின் கீழ்ப்பகுதியில் காயம் ஏற்பட்டதோடு ரத்தம் கொட்டியுள்ளது. இதனையடுத்து சிறுவன் உறவினர் மற்றும் பொதுமக்கள் குழந்தையினை மீட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தில் நெற்றி மற்றும் மூக்கில் காயமடைந்துவிட்டதால், சிறுவனுக்கு தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஊசி என்றவுடன் பயந்த சிறுவன் மருத்துவர்களைச் சிகிச்சை அளிக்கவே விடவில்லை. இந்நிலையில் தான் மருத்துவர் சந்திரசேகர் மற்றும் அவரது குழுவினர் சிறுவனிடம் என்ன பிடிக்கும் என்று பேச ஆரம்பித்தனர். எந்த ஹீரோ பிடிக்கும் என கேட்கத் தொடங்கியதுமே எனக்கு விஜய்னா எனக்கு ரெம்ப பிடிக்கும் என பேச ஆரம்பித்துள்ளார் அச்சிறுவன். அதோடு பிகில் படத்தினை நான் அடிக்கடி பார்ப்பேன் எனவும் விஜய் படங்களில் வரும் வசனம் மற்றும் பாடல்கள் அனைத்தையுமே மனப்பாடம் செய்துவிடுவேன் என தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட மருத்துவர்கள், சிறுவனின் வலி நிவாரணி எது என்று தெரிந்துகொண்டனர்.
பின்னர் மருத்துவர் ஒருவர் தன் மொபைல் போனில் இருந்த பிகில் படத்தினைப் போட்டு விபத்தில் காயமடைந்த சிறுவனின் கையில் கொடுத்து விட்டனர். தன்னுடைய வலியினையும் பொருட்படுத்தாமல் பிகில் படத்தினைப் பார்க்கத்தொடங்கிய நிலையில் தான், மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு மயக்க மருந்துக் கொடுத்து நெற்றி மற்றும் மூக்கில் 7 தையல்களை 15 நிமிடங்களில் போட்டு முடித்துள்ளனர். பின்னர் சிறுவனுக்குரிய மருந்துகளை வழங்கி வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். இந்த செயல் நகைப்பினை ஏற்படுத்துவதாக இருந்தாலும், அவசர சமயத்தில், மருத்துவர்களின் இந்த சமயோஜித புக்தி சிறுவனின் சிகிச்சைக்கு உதவிக்கரமாக இருந்தது.
இதனையடுத்து இச்செயலில் ஈடுபட்ட மருத்துவக்குழுவினருக்கு அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர். இதேபோன்று தான் பல மருத்துவர்கள் தங்களது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்குவது, கதை சொல்லிக்கொண்டே ஊசியினை செலுத்துவதோடு சிகிச்சைகளையும் அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் இறக்கை இல்லாத தேவதைகள்தானே..!