தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்ற தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். மறுபுறம் ஆளுங்கட்சியான திமுகவும் சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை நேற்று தொடங்கி மக்களை கவரும் யுக்தியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
விஸ்வரூபம் எடுப்பாரா விஜய்?
இந்த நிலையில், இந்த இரு பெரும் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அவர் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினார். கட்சி தொடங்கியது முதல் இன்று வரை அவர் மாநிலத்தில் ஆளுங்கட்சியான திமுக-வையும், மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வையும் மட்டுமே விமர்சித்து வருகிறார்.
பட்டியல் எடுக்கச் சொன்ன விஜய்:
மேலும், இந்தாண்டு இறுதிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் விஜய் கட்சியினருக்கு ஆணையிட்டுள்ளார். செப்டம்பரில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்., தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பட்டியல் தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின்போது ஒவ்வொரு தொகுதி மக்கள் மத்தியிலும் அவர்கள் மேற்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பரப்புரையில் பேச அவர் வியூகம் வகுத்துள்ளார். இதன்மூலம் ஆளுங்கட்சிக்கு எதிராக தனது பரப்புரையை பலப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார். விஜய்யின் இந்த உத்தரவிற்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்ட தவெக நிர்வாகிகளும், தங்களது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய பிரச்சினைகளின் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.
பூத் கமிட்டி:
ரசிகர்கள் பலத்தை மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த நடிகர் விஜய், கட்சியை அடிமட்டத்தில் இருந்தே வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் தவெக-வின் பூத் கமிட்டியை வலுப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு பூத்திலும் நிர்வாகிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஏனென்றால், பூத் கமிட்டி என்பது ஒவ்வொரு கட்சிக்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக-விற்கு மட்டுமே பூத் கமிட்டி வலுவாக உள்ளது. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக-விற்கு பூத் கமிட்டி மிகவும் வலுவாக உள்ளது. இதனால், அவர்களுக்கு நிகராக பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - அதிமுக - நாம் தமிழர் - தவெக என்ற நான்கு முனைப் போட்டிகள் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.