மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் ரயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் விழுந்த சிறுமியைக் காப்பாற்ற, அதே தண்டவாளத்தில் குதித்த நபர் ஒருவர் சமீபத்தில் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அவரது மனிதநேயமிக்க செயல் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. 


கடந்த பிப்ரவரி 5 அன்று, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் தச்சராக பணி செய்யும் முகமது மெஹ்பூப் என்பவர் தன்னுடைய தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. போபால் நகரத்தின் பார்கேடி பகுதியில் உள்ள தனது தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அருகில் இருந்த தண்டவாளத்தில் சரக்கு ரயில் வருவதை அவரும் அப்பகுதிவாசிகளும் கண்டுள்ளனர். 



முகமது மெஹ்பூப்


 


ரயில் அந்த வழியில் சென்று கொண்டிருந்த போது, தனது பெற்றோருடன் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுமி திடீரென தண்டவாளத்தில் விழுந்ததைக் கண்ட முகமது மெஹ்பூப் அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, கீழே விழுந்த சிறுமியின் மீது சரக்கு ரயில் நெருங்கத் தொடங்கியது.


உடனிருந்தவர்கள் அச்சத்துடன் நிற்க, தனது தைரியத்தை வெளிப்படுத்திய முகமது மெஹ்பூப் தனது உயிரைக் குறித்து கவலைப்படாமல், எழுவதற்கு முயன்ற சிறுமியை நோக்கி விரைந்துள்ளார். அதன்பிறகு சிறுமியை நோக்கி குதித்த முகமது மெஹ்பூப் சிறுமியைக் காப்பாற்ற தனக்கு நேரம் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்து, அவரைத் தண்டவாளத்தின் நடுவில் இழுத்துக் காப்பாற்றியுள்ளார். 



 






சிறுமியின் பாதுகாப்பை உறுதிசெய்ய, ரயில் அப்பகுதியைக் கடக்கும் வரை, சிறுமியின் தலையை நிமிராமல் பிடித்து காப்பாற்றியுள்ளார் முகமது மெஹ்பூப். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து அதனைப் பகிர்ந்ததில் தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சரக்கு ரயில் தலைக்கு மேலே செல்லும்போது முகமது மெஹ்பூப் சிறுமியின் அச்சத்தைப் போக்க அவரது கையைப் பிடித்துக்கொண்டிருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டி நெகிழ்ந்துள்ளனர்.