ஈரான் - இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரில் தற்போது அமெரிக்காவே நேரடியாக களமிறங்கியிருப்பது உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், ஈரான் நாட்டுடன் பல நாடுகள் வர்த்தக உறவு வைத்திருப்பது தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு பாதிப்பா?
மேலும், ஈரான் வழியாக பாயும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே உலகின் மிகப்பெரிய வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த போர் அபாயத்தால் ஹார்முஸ் நீர்வழித்தடத்தை ஈரான் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் இந்த நீர்வழித்தடத்தை மூடினால் இந்தியா மிக கடுமையாக பாதிக்கப்படும்.
கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்பு:
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை நிபுணர் ராபிண்டர் சச்தேவ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ஹார்முஸ் நீர்வழித்தடத்தை ஈரான் மூடினால் இந்தியா கண்டிப்பாக பாதிக்கப்படும். உலகின் கச்சா எண்ணெயில் சுமார் 20 சதவீதமும், உலகின் இயற்கை எரிவாயுவில் 25 சதவீதமும் இந்த நீர்வழித்தடத்தின் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. போரின் தீவிரம் முற்றி ஈரான் இந்த ஹார்முஸ் நீர்வழித்தடத்தை மூடினால் எண்ணெய் விலை அதிகரிக்கும்.
அவ்வாறு அதிகரித்தால் பணவீக்கமும் உயரும். கச்சா எண்ணெய் விலை உயரும் ஒவ்வொரு 10 டாலருக்கும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எகிறப்போகிறதா விலைவாசி?
இந்தியாவிற்கு கிடைக்கும் கச்சா எண்ணெயில் சுமார் மூன்றில் இரண்டு பங்கும், இந்தியாவிற்கு கிடைக்கும் எல்என்ஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயில் பாதியும் ஹார்மூஸ் நீர்வழித்தடத்தின் வழியாகவே கிடைக்கிறது.
ஈரான் ஹார்மூஸ் நீர்வழித்தடத்தை மூடினால் கச்சா எண்ணெய் கிடைப்பதில் இந்தியாவிற்கு சிரமம் ஏற்பட்டால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அவ்வாறு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால் இந்தியாவில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை தாறுமாறாக உயரும் அபாயம் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஏற்கனவே இஸ்ரேல் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதல் காரணமாக வணிக கப்பல் போக்குவரத்து செங்கடலில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் பாப்- எல்- மண்டேப் நீர்வழித்தடத்திலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதால் ஏற்கனவே அந்த வழித்தடத்தில் நடக்கும் வர்த்தகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த உலக நாடுகள் அமெரிக்கா, இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றனர்.