டெல்லியைச் சேர்ந்த இஷா பன்ஸால் பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர். தலைநகரைப் புரட்டிப்போட்ட கொரோனா பேரிடர் இவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. இவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் கொரோனா பாசிட்டிவ் என உறுதிசெய்யப்பட்டனர். இதில் அவரது 86 வயதான பாட்டியும் பாதிக்கப்பட்டார். கொரோனா பாதிக்கப்படும் பெரும்பாலான முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் இவர் மிகுந்த வலிமையுடன் அதிலிருந்து மீண்டு வந்தது அனைவராலும் வியக்கப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு காசநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர். அதனால் அவரது இடது நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டது
இந்த உடல்நிலையுடன் அவர் கொரோனாவிலிருந்து எப்படி மீண்டார் என்பதுதான் ஆச்சரியம், இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இஷா, ‘பாட்டிக்கு இடது நுரையீரல் பழுதடைந்ததால் அவரது வயதின் காரணமாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை கூடச் செய்யவில்லை. அதனால் கொரோனா பாதிக்கப்பட்ட போது அவரால் சரிவர உணவு எதையும் உட்கொள்ள முடியவில்லை. நல்ல ஆரோக்கியமான நபருக்கே கொரோனா பாதிப்பு நுரையீரலை நாசம் செய்துவிடும் நிலையில் பாட்டியின் நிலைமை குறித்துக் கேட்கவே வேண்டாம். ஆனால் எப்படியோ போராடி 25 நாட்களுக்குப் பிறகு மீண்டு வந்திருக்கிறார்.நம்பிக்கை இழக்காமல் மனம் தளராமல் அவருக்காக உடனிருந்து போராடிய என் அம்மாவும் ஒரு காரணம், பாட்டி நோய்வாய்பட்ட இத்தனை நாட்களும் அவரை விட்டு என் அம்மா நகரவேயில்லை.அன்பு, பரிவு, பொறுமை ஒரு உயிரை எப்படி மீட்டெடுக்கும் என்பதற்கு என் அம்மாவும் அதைப் பற்றிக்கொண்டு மீண்டுவந்த எனது பாட்டியும் ஒரு உதாரணம்’ எனப் பகிர்ந்துள்ளார்.
25 நாட்களுக்குப் பிறகு தனது மகள் தரும் பாயசத்தைச் சுவைத்துச் சாப்பிடும் இந்தப் பாட்டியின் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. பாட்டியின் போராட்ட குணம் கொரோனாவால் போராடும் பலருக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கட்டும்.
இது ஒருபக்கம் இருக்க, உண்மையில் காசநோயும் கொரோனாவும் ஒரு அபாயமான சேர்க்கை என உலக நாடுகள் தெரிவித்துவருகின்றன. 2035-க்குள் உலகத்தை காசநோய் இல்லாத இடமாக மாற்றுவது என உலக சுகாதார மையம் தனது கொள்கையில் பிரகடனப்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் கொரோனா உலக நாடுகளில் பரவியது. கொரோனா இந்தியாவுக்குப் பரவிய நிலையில் காசநோய் பாதிக்கப்பட்ட நபர்கள்தான் அதிகம் அச்சப்பட்டார்கள் எனச் சொல்லலாம். ஏனெனில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சத்து மிகமிகக் குறைவாக இருக்கும். மேலும் கொரோனாவும் நுரையீரலை பாதிப்பதாகச் சொன்னதும் பொதுமக்கள் எல்லோருமே பீதியடைந்தார்கள். ஆனால் அச்சத்துக்கு மாறாக காசநோய் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களில் கொரோனா தொற்று நெகட்டிவ் என்றே வருவதாகவும் தங்களது காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட காசநோயாளிகளில் 1 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் மும்பை காசநோய் மருத்துவமனையின் மருத்துவர் லலித் ஆனந்தே அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதுமட்டுமல்ல இந்தியா முழுவதும் பரவலாகவே காசநோய் பாதிக்கப்பட்டவர்களில் இந்த நிலைதான் காணப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதனால் இதனடிப்படையில் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள ஒருபக்கம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read: நம் உடலில் கொரோனா எதிர்ப்புசக்தி எவ்வளவு இருக்கு?' - கண்டுபிடிக்க வந்துவிட்டது புதிய பரிசோதனை!